Monday, March 4, 2019

இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச விமான நிலையத்தை நிறுவுவதற்கான திறன் கிடையாது - எதிர்க்கட்சித் தலைவர்

பலாலியில் புனரமைக்கப்படவுள்ள விமான நிலையம், சர்வதேச விமான நிலையம் என, அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரத்தில் வைத்து அவர் இதனைத் கூறினார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ் - பலாலியில் உள்ள விமான நிலையம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் குறித்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஹம்பாந்தோட்டை - மத்தல சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியாத அரசாங்கத்தினால், மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தை நிறுவுவதற்கான திறன் கிடையாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது கடத்தல் சம்பவங்கள் பல அரங்கேறி வருவதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர், மீண்டும் வன்முறையுடனான காலப்பகுதியொன்று உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை மாத்திரமன்றி, தெற்கு மற்றும் வடக்கு மக்களுக்கு எவ்வித அச்சமும், சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான சூழலை, தமது அரசாங்கம் அன்றே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் இதன்போது நினைவூட்டியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் வர்த்தகர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணம், தற்போது கனவாகியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com