இன்று ஆரம்பமாகிறது கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
இலங்கை இந்திய பக்தர்களை ஒன்றிணைக்கும் வரலாற்று சிறப்பு மிகு கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று தொடங்கவுள்ளது. இந்த பெருந்திருவிழாவில் இலங்கை – இந்திய பக்தர்கள் 9000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழா, நாளை வரை நடைபெறவுள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு அந்தோணியார் தேர் பவனி, நாளை காலை 7 மணிக்கு திருப்பலி பூஜை என 2 நாட்கள் இந்தத் திருவிழா நிகழ்வுகள் நடைபெறும். இதில் பங்கேற்க வடக்கில் உள்ள கிறிஸ்தவ இந்து மற்றும் பௌத்த பக்தர்கள் ஆலயத்திற்கு படையெடுத்துள்ளார்கள். இதேபோன்று , ராமேஸ்வரத்தில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2,400க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று கச்சத்தீவிற்கு வருகை தந்துள்ளார்கள்.
இந்த திருவிழாவிற்காக அனைத்து ஏற்பாடுகளும் உரிய முறையில் நடைபெற வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந. வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இந்த வருட திருவிழா நிகழ்வில் பங்கேற்கும் இலங்கை – இந்திய பக்தர்கள் அனைவருக்குமான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர் .
முன்னதாக இந்தியாவில் இருந்து வருகைதரும் 2500 பக்தர்களுக்கு மேற்பட்டோர் அங்குள்ள ஆட்சியாளர் அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள். அதேநேரம் தமது நாட்டு படகுகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்றும் மீனவ சங்கங்கள் தமிழ் நாட்டில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களுக்கு அவர்களின் படகுகளை தரித்து வைப்பதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தடை செய்த பொருட்கள், வர்த்தக பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்சென்றால் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர், குற்ற வழக்குகள் உடையவர், இலங்கை அகதிகள் என தெரிய வந்தால் அவர்கள் படகில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இந்திய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2 நாள் விழா முடிந்து, கொடி இறக்கப்பட்டதும் நாளை காலை 11 மணிக்கு பின்னர் கச்சத்தீவில் இருந்து இந்திய பக்தர்கள் படகில் ராமேஸ்வரம் திரும்புகின்றனர். அத்துடன் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள் நேற்று முதல் கச்சத்தீவு கடல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு இரண்டு நாள் திருவிழா காரணமாக பாதுகாப்பு கருதி மீன் பிடிக்க செல்லவதற்கு தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment