Saturday, March 2, 2019

படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு நிறுத்தப்பட்டது

நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புழுவால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய அமைச்சினால் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கமநல சேவை சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த தினம் படைப்புழுவின் தாக்கத்தால், சோளம், குரக்கன், வாழை உள்ளிட்ட பல பயிற்செய்கைகள் முற்றாக அழிவடைந்ததை அடுத்து அந்த பயிற்செய்கைகளை உடன் நிறுத்துமாறு, விவசாய அமைச்சு, உரிய விவசாயிகளிடம் கோரிக்கை முன்வைத்தது.

படைப்புழுவால் ஏற்பட்ட பாதிப்புக்களின் தன்மையை கருத்தில் கொண்டு, தகுந்த இழப்பீடுகளை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், தற்போது அந்த செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கமநல சேவை சம்மேளனத்தின் பணிப்பாளர் வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்த வீரகோன், விவசாய அமைச்சு காலம் தாழ்த்தாது, மக்களுக்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

இதேவேளை படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்தவாறு இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், இந்த இழப்பீடு வழங்கும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த நாமல் கருணாரத்ன, மக்கள் இது குறித்து, விவசாய அமைச்சுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment