Wednesday, March 6, 2019

பட்ஜெட்டை செயற்படுத்த புதிதாக காசு அச்சிட வேண்டும் - குமார வெல்கம

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணைக்கு வாக்களிப்பதில்லையெனக் கூறுபவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களே என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நிதி அமைச்சினால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பனவற்றை சிறப்பாக முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதியின் அமைச்சு, வரவு செலவுத் திட்ட பிரேரணைகளை முன்வைத்துள்ளது எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பிக்கள் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இந்த வருடத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைகளை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

உண்மையில் வரவு செலவுத் திட்டம் சகல பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், இந்தத் திட்டங்களை இவ்வருடம் முடியும் வரையில் செயற்படுத்த அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment