இலங்கை குறித்த ஆணையாளரின் அறிக்கை இன்று
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை ஜெனீவாவில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முதலாவது அமர்வின்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்வைத்தன. இந்தத் தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
குறித்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின்போது மேலும் 2 வருடங்களால் குறித்த அவகாச காலம் நீடிக்கப்பட்டது.
இதற்கமைய, இந்தத் தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று முழுமையான அறிக்கை ஒன்றை வௌியிடவுள்ளார். இன்று கொண்டுவரப்படும் அறிக்கைக்கு அமைவாக இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன.
இதேவேளை, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான பிரேரணை ஒன்றை பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகள் இம்முறை கூட்டத் தொடரில் முன்வைக்கவுள்ளன.
எவ்வாறான போதிலும் பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்படும் பிரேரணையை நிறைவேற்ற இலங்கை மீண்டும் 2 வருட கால அவகாசத்தை கோருவதற்குத் தயார் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment