Sunday, March 10, 2019

மன்னார் மனித புதைகுழி குறித்து தடயவியல் நிபுணர் வெளியிட்ட கருத்து

அண்மையில் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், 600 ஆண்டுகள் பழமையானது என அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மன்னார் மனித எலும்புக் கூடுகளின் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

அமெரிக்காவின் அறிக்கை வெளியானதை அடுத்து ஒல்லாந்தர்களுக்கும், போர்த்துக்கேயர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டவர்களின் உடலங்களே, மன்னாரில் புதைக்கப்பட்டிருக்கலாம் என பல்வேறு தரப்பினரால் சந்தேகம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் மனித எலும்புக் கூடுகள் குறித்து தடயவியல் நிபுணர் செல்வ சுரேஷ் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என, தடயவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைக்குழியின் எலும்பு கூடுகள், கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என கார்பன் பரிசோதனை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு, சர்வதேச தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை கண்டறிய வேண்டும்.

மன்னார் மனித எச்சங்கள், அந்த மண்ணின் தரம் மற்றும் தட்ப வெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப காணப்பட வேண்டும். நான் நேரில் பார்த்த தடவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடவியல் ஆய்வாளர்கள் இல்லை. எனவே இந்த கார்பன் அறிக்கையை வைத்துக் கொண்டு எந்தவித முடிவுகளுக்கும் வர முடியாது என, தடயவியல் நிபுணர் செல்வ சுரேஷ் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com