ஆளும் கட்சியில் பங்கேற்கும் ஒரு சிறிய அல்லது சிறுபான்மைக் கட்சியின் பலம் என்பது ஆட்சியின் பிரதான கட்சியின் பாராளுமன்றப் பலம் அல்லது பலயீனத்தில் தங்கியிருக்கின்றது. உதாரணமாக மஹிந்தவின் ஆட்சியில் சிறுபான்மைக் கட்சிகளின் பலம் குன்றியதாய் இருந்தது. காரணம் அவரின் சொந்த பாராளுமன்றப் பலம் தேவைக்கதிகமாகவே இருந்தது. மறுபுறம் சந்திரிக்காவின் ஆட்சி முஸ்லிம் காங்கிரசில் தங்கியிருந்தது. அதனால்தான் மறைந்த தலைவரால் சாதிக்கமுடிந்தது.
இலங்கை வரலாற்றில் ஆளும்கட்சி இம்முறை இருந்ததுபோன்று பலகீனமாக ஒருபோதும் இருந்ததில்லை. அதன்முழுப்பலமும் சிறுபான்மைக் கட்சிகளாகவே இருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம்கட்சிகள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன. அது அண்மையில் கவிழ்க்கப்பட்ட ஆட்சியை மீண்டும் தூக்கி நிறுத்துவதில் மிகவும் துல்லியமாகப் புலப்பட்டது. ஆனாலும் சாதித்ததெதுவுமில்லை.
ஒரு அடையாளத்திற்காவது அகற்றப்பட்ட ஒரு அலுவலகலகத்தைக்கூட மீளக்கொண்டுவர முடியவில்லை.
மறுபுறம், ஆட்சியின் ஆரம்பத்தில் த தே கூ இன் தேவை அரசாங்கத்திற்கு இருக்கவில்லை; காரணம் ஶ்ரீ சு கட்சியும் ஆட்சியில் பங்காளியாக இருந்தது. ஆனாலும் அரசியல் ராஜதந்திரியான ரணில், மைத்திரியை நிரந்தரமாக நம்பமுடியாது; என்பதை ஆட்சியின் ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டார். அதனால் எண்ணிக்கையின் அடிப்படையில் அன்று அவசியமில்லாதபோதும் த தே கூ ஐயும் ஒரு பங்காளிக்கட்சியாகவே நடாத்தினார்.
ஆட்சி தொடங்கி ஒரு வருடம் செல்வதற்குள்ளேயே மைத்திரி, ஐ தே கட்சியை விமர்சிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தனது மைத்திரி தொடர்பான சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட ரணில் த தே கூட்டமைப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.
மறுபுறம், மீண்டும் ஜனாதிபதியாகும் கனவில் மிதக்க ஆரம்பித்த மைத்திரி த தே கூட்டமைப்பை அனுசரித்துப் போகத்தொடங்கினார். இதன்விளைவாக பல தசாப்தங்களாக இராணுவம் கையகப்படுத்திய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டன. இவ்வாறு த தே கூ இருபுறமும் சாதனை அரசியலில் கோலோச்ச ஆரம்பித்தார்கள்.
நாம் நேரடி ஆதரவு கொடுத்தும் இதுவரை சாதித்ததெதுவுமில்லை. இழந்தவற்றின் பட்டியல்தான் நீண்டுகொண்டு செல்கின்றது.
இந்தப்பின்னணியில்தான் சாய்ந்தமருது உள்ளூராட்சி கோரிக்கை விவகாரமும் பார்க்கப்பட வேண்டும்.
கல்முனைப் பட்டினசபையுடன் அன்று இணைக்கப்பட்ட மூன்று கிராமசபைகளில் ஒன்றைப் பிரிப்பதால் ஏற்படும் சமூக சமநிலை மாற்றம்காரணமாக அவ்வாறு இணைக்கப்பட்ட மூன்று சபைகளையும் கல்முனையில் இருந்து ஏககாலத்தில் வேறாக்குமாறு கல்முனை மக்கள் கோருகின்றனர். இதற்கு யாரும் எதிர்ப்பு இல்லை.
அதாவது சாய்ந்தமருதுக்கு தனிச்சபை வழங்கவும் யாரும் எதிர்ப்பு இல்லை. நான்காகப் பிரிக்கவும் யாரும் எதிர்ப்பு இல்லை. தமிழ்தரப்புகூட எதிர்ப்பு இல்லை.
அவ்வாறாயின் என்ன பிரச்சினை?
பிரச்சினை நான்காகப்பிரிப்பதில் அல்ல. மாறாக அவ்வாறு பிரிக்கும்போது முன்னாள் கல்முனைப்பட்டின சபையின் எல்லையில் தாளவட்டுவானில் இருந்து கடற்கரைப்பள்ளி வீதிவரை 2/3 பங்கு தூரத்தை முழுசாக தமக்கு வழங்கவேண்டும்; என்கின்ற தமிழ்தரப்பின் நியாயமற்ற கோரிக்கையாகும்.
1987ம் ஆண்டு திரு பிரேமதாச பிரதேசசபைத் திட்டத்தைக் கொண்டுவந்து இவற்றை இணைக்கமால் இருந்திருந்தால் இன்றுவரை அதே எல்லைகள்தான் இருந்திருக்கும். சாய்ந்தமருது மக்கள் எவ்வாறு அன்றிருந்த கிராமசபையை தமக்கு மீண்டும் கோருகின்றார்களோ அது எவ்வாறு சகலருக்கும் நியாயமாகத் தெரிகின்றதோ அதேபோன்றுதான் கல்முனை மக்கள் அன்றைய பட்டின சபையைக் கோருகின்றார்கள். ஆனால் கல்முனை மக்களின் 2/3 பகுதி கரவாகு வடக்கு கிராமசபைக்கு புதிதாக வரவேண்டுமென்ற தமிழ்த்தரப்பின் கோரிக்கைதான் பிரச்சினையாகும்.
முதலாவது தமிழ்த்தரப்பின் இந்த நியாமற்ற கோரிக்கை தொடர்பாக அவர்களுடன் பேசுவதே தவறு. (துரதிஷ்டவசமாக நம்மவர்கள்தான் அவர்களுடன் பேசவேண்டுமென்று பிரேரித்திருக்கின்றார்கள்; என்பது மிகவும் அதிர்ச்சியானது.) அவர்கள் வழமைபோல் அவர்களது தடைக்கற்களை போடுகின்றார்கள். நாங்களும் கையாலாகதவர்களாக கூட்டம் போட்டுப் பேசுகின்றோம். போதாதென்று குழு அமைத்து இன்னும் பேசப்போகின்றோம்.
நாம் புதிதாய் ஏதாவது கேட்கின்றோமா? இந்த ஆட்சியில் பங்காளிகள் நாங்கள். கவிழ்ந்த ஆட்சியை மீட்டுக்கொடுப்பதில் பிரதான பங்களித்தவர் நாங்கள். இன்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நாங்கள். எங்களை வைத்தே தேசிய அரசாங்கம் அமைக்கமுடியுமா? என்று சிந்திக்கின்ற அளவு அரசில் பலம்பொருந்தியவர்கள் நாங்கள். ஆனால் எங்களால் எதையும் சாதிக்கமுடியாது.
தயாகமகே எதிர்த்தால் பறிபோன ஒரு அலுவலகத்தைக்கூட கொண்டுவரமுடியாது; இராணுவம் பிடித்த காணிகளே அடுத்த பக்கம் விடுவிக்கப்படும்போது தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கான வாகனத் தரிப்பிடத்தற்காக கொடுத்த ‘கரங்கா’ காணிகளையே மீட்கமுடியாதவர்கள் நாங்கள்.
இந்த இலட்சணத்தில் அன்றிருந்த சபையைக் கேட்கின்றோம். தமிழ்தரதரப்பினர் எதிர்க்கின்றார்கள். எனவே, எங்களால் எதுவும் செய்யமுடியாது. 100% முஸ்லிம்கள் வாழும் வீதிக்கு தமிழர் எதிர்க்கின்றார்கள்; என்பதற்காக தாம் விரும்பும் பெயரையே வைக்கமுடியாதவர்கள் நாங்கள்.
முஸ்லிம் முதலமைச்சருக்காக கோசமெழுப்பினோம். முஸ்லிம் முதலமைச்சரும் வந்தார். ஒரு வீதியின் பெயர்மாற்றத்திற்கு ஒரு கையொப்பம் வைக்க கைப்பலம் இல்லாத முஸ்லிம் முதலமைச்சுப் பதவி.
முஸ்லிம் ஆளுநர் வந்ததும் சந்தோசத்தால் ஆர்ப்பரித்தோம். அவருடைய பேனையும் இவ்வீதிப் பெயர்மாற்றத்திற்காக கையொப்பம் வைக்கத்தயங்குகிறது. ஏற்கனவே ஆளுநருக்கெதிராக பல ஹர்த்தால்களைச் செய்து ஆளுநருக்கு செய்தியைச் சொல்லிவிட்டார்கள். “ கவனம் , நாம் விரும்பாத எதையும் நீங்கள் செய்யமுடியாது” என்று.
சண்முகா வித்தியாலய ஆசிரியை விவகாரம்; மனித உரிமை ஆணைக்குழு அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்ததன்பின்னும் அந்த ஆசிரியைகளின் அடிப்படை உரிமையைக்கூட உறுதிப்படுத்த முடியாத அரசியல் பலவீனர் நாங்கள்.
அவ்வாறாயின் தமிழர் எதிர்க்கின்ற எதையும் நாம் சாதிக்கமுடியாதா? எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மறைமுக ஆதரவை வழங்கிக்கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றை சாதித்துக்கொண்டு தாம் விரும்பாதவற்றை முஸ்லிம்கள் சாதிப்பதைக்கூட தடுக்குமளவு பலம் அவர்களுக்கிருக்கும்போது நேரடி ஆதரவ வழங்கும்நாம் கல்முனைப் பட்டின சபையைக்கூட மீண்டும் பெற்றுக்கொள்ள வக்கற்ற நிலையில் இருக்கின்றோமே! எந்த முகத்துடன் வந்து அடுத்த தேர்தல் மேடையில் வீரவசனம் பேசப்போகின்றோம்.
புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றுவது தொடர்பாக இரண்டொரு நாட்களுக்குமுன்பு த தே கூ, ஜனாதிபதியைச் சந்தித்திருக்கின்றது. அச்சந்திப்புக்கு பிரதமரையும் நமது இரு பெருந்தகைகளையும் அவர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றார்கள்.
அங்கு த தே கூ குறிப்பிட்டிருக்கின்றார்கள். புதிய யாப்பில் மூன்று விடயங்கள் இருக்கின்றன. அவை: அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதிப்பதவி ஒழிப்பு. இதில் தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி பதவி ஒழிப்புத் தொடர்பாக சில எதிர்ப்புகள் இருக்கின்றன ஆளுந்தரப்பிற்குள். ஆனால் அதிகாரப்பகிர்விக்கு யாரும் எதிர்ப்பு இல்லை. எனவே, அதனை முதலில் நிறைவேற்றுவோம்; என்று பிரேரித்திருக்கின்றார்கள்.
இது தொடர்பாக நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. அதில் ஒருவர் சுமந்திரன், மூவர் சிங்களவர். ஒரு முஸ்லிம்கூட இல்லை. அவசியமில்லையே! புதிய நகல்யாப்பிற்கு யாரும் எதிர்ப்பில்லை; என்று அவர்கள் சொன்னபோது அதற்கு அங்கீகாரமளிக்கத்தானே நமது பெருந்தகைகள் சென்றிருக்கின்றார்கள். நகல்யாப்பு அதிகாரப்பகிர்வில் நமக்கு பிரச்சினையே இல்லையா?
அது ஒரு புறமிருக்கட்டும். அதிகாரப்பகிர்வை நிறைவேற்ற ஜனாதிபதியின் சம்மதத்தைப்பெற பிரதமரையும் உங்களையும் அவர்களால் அழைத்துச்செல்ல முடிந்திருக்கிறது. இந்த முசலியில் பறிபோன ஒரு இலட்சம் ஏக்கர் காணியை மீட்க பிரதமரை ஜனாதிபதியிடம் அழைத்துச்செல்ல உங்களால் முடிந்ததா? ஆகக்குறைந்தது அமைச்சரவையிலாவது பேசமுடிந்ததா?
இவ்வாறு தேர்தல் மேடைகளில் வீரவசனம். சாதித்ததெதுவுமில்லை; என்கின்ற வரலாறு தொடரமுடியுமா? தொடர அனுமதிக்க முடியுமா?
இனியும் கூட்டங்கள் வைத்து கோமாளித்தனம் செய்வதை நிறுத்துங்கள். ஐந்து வருடங்கள் ஏமாற்றிவிட்டு இப்பொழுதான் பேச ஆரம்பத்திருக்கின்றீர்களா? பம்பாத்துக்கள் இனியும் வேண்டாம்.
த தே கூ எதிர்த்தால் இந்த அரசில் முஸ்லிம்களுக்கு எதுவித நியாயமும் கிடைக்காதா? என்று அரசிடம் கேளுங்கள். உடனடியாக கல்முனை மாதகரசபையை 1987 இருந்ததைப்போன்று நான்காகப் பிரகடனப்படுத்தச் சொல்லுங்கள்.
சண்முகா பாடசாலையில் அவ்வாசிரியைகள் மீண்டும் கடைமையாற்றுவதற்கான உத்தரவை உடனடியாக விடுக்கச்சொல்லுங்கள். கரங்கா காணியை இனியும் தாமதியால் விடுவிக்கச்சொல்லுங்கள். பறிபோன அலுவலகங்களை அவசரசமாக திருப்பித்தரச்சொல்லுங்கள். ஏனைய பிரச்சினைகளையும் தீர்க்கச் சொல்லுங்கள்.
இவை எதையும் சாதிக்க உங்களுக்குத் திறன் இல்லையாயின் தயவுசெய்து இனியும் தாமதியாமல் அரசை விட்டு வெளியேறுங்கள். மக்கள் அசமந்தமானவர்கள். இவற்றையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்; என்று தொடர்ந்தும் தப்புக்கணக்குப் போடாதீர்கள்.
வீறுகொண்டெழும் சமூகத்தின்முன் வீணராகிவிடாதீர்கள். எழுச்சிகாணப்போகும் சமுதாயத்தை என்றென்றும் ஏமாற்றமுடியுமென கனவு காணாதீர்கள். சாதுவான சமூகம் மிரண்டால் காடு தாங்காது; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சமூகத்தின் விலாசத்தை உறுதிப்படுத்துங்கள்; தவறின் நீங்கள் விலசமற்றுப்போய்விடுவீர்கள்.
த தே கூ இற்கு கூறுகின்றோம்
நீங்கள் ஒரு புறம் பேரினவாத்திற்கெதிராக போராடிக்கொண்டு மறுபுறம் இன்னுமொரு சமூகத்தை தொடர்ந்தும் நசுக்க முற்படாதீர்கள். அன்று ஆயுத இயக்கங்கள் பேரினவாத்திற்கெதிராக தூக்கிய துப்பாக்கியை அப்பாவி முஸ்லிம்களுக்கெதிராக நீட்டினார்கள். அப்போது தற்காப்பிற்காக 500 முஸ்லிம் பொலிஸாரைக்கூட நியமிப்பதை எதிர்த்தீர்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்களைத் தேவைப்படும்போது தமிழ்பேசும் சமூகமாக குறிப்பிடுவதும் சாத்தியமானபோதெல்லாம் அவர்களை நசுக்குவதுமான உங்கள் சிற்றினவாதத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். தேசிய அரசியலில் தமிழர் எப்பக்கமோ அதற்கெதிரான பக்கத்திற்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்; என்கின்ற கட்டாய சூழ்நிலையை முஸ்லிம்கள் விதியாகக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தாதீர்கள்.
இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் உங்களது முஸ்லிம்விரோத நிலைப்பட்டிற்குமுன்னால் கையாலாகதவர்களாக இருக்கலாம். அதற்காக காலம் மாறாது; என நினைக்காதீர்கள். காலம்மாறி காத்திரமானவர்களை நீங்கள் சந்தித்தால் கடந்தகாலத் தவறுகளுக்காக்கவும் நீங்கள் கவலைப்பட நேரிடும்.
இன்னும் நாம் உங்களுக்கு “ஒலிவ்” கிளையையே நீட்டுகிறோம். இந்த இரு சமூகங்களும் சமாதானமாக வாழ வழிவிடுங்கள். “ வாழ்! வாழவிடு!!
1987ம் ஆண்டு இருந்ததுபோன்று கல்முனையை இருக்க விடுங்கள்!
எங்கள் பெண்களின் கௌரவமான ஆடையை சண்முகா பாடசாலையில் அணிய அனுமதியுங்கள்!!
நாங்கள் வாழும் வீதிக்கு நாங்கள் விரும்பும் பெயர் வைக்கும்போது வீணாய் மூக்கை நுழைக்காதீர்கள். முஸ்லிம்கள் அடுத்த சமூகங்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்ததுமில்லை. செய்யவேண்டிய அவசியமுமில்லை. அதேநேரம் அடுத்தவர்களால் அநியாயம் செய்யப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது; என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment