அவர்கள் பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக பேசுகின்றார்களாம், டக்ளஸ் மக்களுக்காக பேசுகின்றாராம் !
நான் இந்த சபையில் எழுப்பும் கேள்விகளும் எடுத்துரைக்கும் நியாயங்களும், தரகு தமிழ்த் தலைமைகள் விரும்புவது போல் நாளை ஊடகங்களில் மட்டும் வெளி வரவேண்டும் என்பதற்காக அல்ல. எமது மக்களின் தீராப்பிரச்சினைகளுக்கு தீர்வு தேவை என்பதற்காகவே நான் குரல் எழுப்புகிறேன்!.
இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
நான் ஆட்சியில் பங்கெடுத்த காலங்களில் குரலெழுப்ப வேண்டிய அவசியம் எனக்கு இருந்திருக்கவில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற அளவில் மின்னாமல் முழங்காமல் பொழிகின்ற வான் போல் முடிந்தளவு செயல் வீர காரியங்களாக நான் சாதித்து காட்டியிருக்கின்றேன்.
நான் அப்போது கொண்டிருந்த அரசியல் பலத்தை விடவும் பன் மடங்கு அரசியல் பலத்தோடு இன்றிருக்கும் தரகுத் தமிழ் அரசியல் தலைமைகள் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு ஆளுமை இருந்திருந்தால், தமிழ் மக்கள் மீதான அக்கறை இருந்திருந்தால், தீர்வு காண வேண்டும் என்ற விருப்பம் இருந்திருந்தால், அல்லது ஆற்றலும் அனுபவமும் இருந்திருந்தால், நான் இன்று எடுத்து கூறும் நியாங்களுக்கு என்றோ தீர்வுகள் கிடைத்கிருக்கும்.
வேலையற்ற பட்டதாரிகளின் தொகை ஆண்டு தோறும் பெருகி வருகிறது, தொண்டர் ஆசிரியர்களின் குரல்கள் இன்னமும் ஒலித்து வருகிறது, காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் நீடித்து வருகிறது, இவைகளை எல்லாம் தமது அரசியல் பலத்தை வைத்தே அரசுடன் அவர்கள் பேசி அதற்கென தீர்வுகள் காண முடியவில்லை.
இந்த இலட்சணத்தில் விமானம் ஏறி ஐ. நா கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெனீவா போக புறப்படுகிறார்கள். வலிகளும் வதைகளும் சுமந்த எமது மக்களின் காதுகளில் பூ வைத்து, அதன் பெயரால் இவர்களுக்கு கிடைத்திருப்பது ஜெனீவா என்னும் வருடாந்த திருவிழா!
ஜெனீவாவில் இருந்து எதை கொண்டு வந்தீர்கள் என எமது மக்கள் நாளையும் கேட்பார்கள். எதை கொண்டு வந்தோம் என்று எமது மக்களுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள்? சுவிஸ் நாட்டின் சொக்கிலேட்டும் மணிக்கூடும் உங்கள் குடும்பங்களுக்கு மட்டும் கொண்டு வந்தீர்கள் என்பதை எமது மக்களுக்கு சொல்வீர்களா?
உங்கள் பயணப்பைகளில் பாதி இடம் வெற்றிடமாக வைத்து சென்றீர்கள். அதில் உங்கள் பிள்ளைகளுக்கு சுவிஸ் பொம்மைகளை நிரப்பி வருவதை சொல்வீர்களா?
வருகின்ற வாய்ப்புகள் எதுவாயினும் அதை பயன்படுத்தும் கொள்கையுடையவர்கள் நாங்கள். ஐ.நா வின் அழுத்ததால் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்குமென்றால் அதையும் நாம் வரவேற்போம்.
ஆனாலும் உள்ளுரிலேயே மேய முடியாத மாடுகள் நீங்கள். ஐ.நாவை காட்டி உங்கள் உல்லாச மேய்ச்சலை எமது இனத்திற்கான மோட்சமாக நீங்கள் காட்டுவதையே நான் தவறு என்று கூறுகின்றேன்.
வேதாளம் குடிபுகுந்த வீட்டில் படுத்துறங்கி பூபாள விடியல் பாடி விழித்தெழ ஒரு போதும் முடியாது!....
நேற்று என்பது உடைந்த பானை!....
நாளை என்பது மதில்மேல் பூனை!!.....
இன்று என்பதே கையில் உள்ள வீணை!!!....
இதுவே தமிழ் பேசும் மக்கள் இனி வழங்க வேண்டிய ஆணை!.......
அதற்காகவே நாம் காத்திருக்கின்றோம் என்றார்.
0 comments :
Post a Comment