போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக, தாம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
போதைப்பொருட்களை கட்டுப்படுத்துதல், குற்றங்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைபுகள் தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நீண்டகாலம் செல்கின்றமையால், போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடிவதில்லை. இந்த நிலைமை விரைவில் சரி செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக் காட்டினார்
தற்போதுள்ள உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலேயே இந்த புதிய நீதிமன்றத்தையும் ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக இன்று நாட்டின் அனைத்து மக்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதேநேரம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முறைமைகளை திருத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக, புனர்வாழ்வு அதிகார சபை ஒன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியின் தலையீட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அதிகார சபையை ஸ்தாபிக்கும் வரை, குறித்த திட்டங்களை தயாரிப்பதற்கு நிர்வாக சபை ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் பாபுல் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகின்ற நிலைமை தற்போது அதிகரித்து வருகின்றது. முறையான சட்ட ஏ ற்பாடுகள் இல்லாமையினால்,போதை பொருளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. இது குறித்து பல பாடசாலை அதிபர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் இதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை குறித்த கலந்துரையாடலில், சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றில் இடம்பெறும் குற்றங்களை தடுப்பது குறித்தும் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பாரதூரமான குற்றவாளிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பிலும், இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும், உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்டறியும் கலந்துரையாடல், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 திகதி இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment