Monday, March 4, 2019

யாழில் படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஆளுநர் கோரிக்கை

யாழ் மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர், யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில், யாழ் மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் நல்லிணக்க ரீதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாகவும் பேசப்பட்டன.

மேலும், ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கமைவாக பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதையும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் படையினரால் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை பாராட்டிய ஆளுநர், மேலதிகமாக தற்போது பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பாதுகாப்பு கேந்திர ஸ்தானத்தில் அக்காணிகள் இருக்கும் பட்சத்தில் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவற்றிற்கு மாற்றீடான நடவடிக்கைகளை மேற்கொண்டு யாழ் மாவட்டத்தில் காணப்படும் குறித்த காணிப்பிரச்சனைகளை விரைவில் முடிவிற்கு கொண்டுவருமாறும் கட்டளைத்தளபதியிடம் கோரிக்கை விடுத்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com