Saturday, March 9, 2019

போதைப்பொருள் ஒழிப்புக்காக, ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர், பலமான பங்களிப்புக்கள் கிடைக்கும் - ஜனாதிபதி

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர் பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். போதைப்பொருள் பாவனையிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ''சுஜாத தருவோ'' என்ற கண்ணியமான பிள்ளைகள் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கல்வி, சுகாதாரம், பொதுநிர்வாகம், விளையாட்டுத்துறை உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கியமானதொரு நிகழ்ச்சித்திட்டமாக போதைப்பொருட்களுக்கு எதிராக முழு நாடும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 08 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அனைத்து பாடசாலை பிள்ளைகள் தமது பாடசாலைகளிலும், அரச ஊழியர்கள் தங்களது சேவை நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கவுள்ள இந்த நிகழ்வை முன்னிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கட்சி பேதமின்றி பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment