ஜனாதிபதி, மஹிந்தவிடம் விடுத்த ரகசிய கோரிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த தரப்பிற்கு ஜனாதிபதி வேற்பாளர் தொடர்பில் அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கென்யா விஜயத்தை முடித்து நேற்று நாடு திரும்பிய ஜனாதிபதி, இந்த தகவலைத் தனது சகா ஒருவர் ஊடாக மஹிந்த தரப்புக்கு அனுப்பியுள்ளதாகத் தெரியவருகிறது. மஹிந்த தரப்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்திருந்தால், அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி சிறிசேன, மஹிந்த தரப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி வேற்பாளர் தொடர்பில் அறிந்த பின்னர் இரண்டு கட்சிகளுக்கிடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இது இவ்வாறு இருக்க, மஹிந்த தரப்புக்கு அழுத்தத்தை வழங்கும் வகையில் அரசியல் காய் நகர்த்தல்களை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் என மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன், மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளைத் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கக் கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தநிலையில் மஹிந்த தரப்பின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்பது தொடர்பில் ஒரு குழப்பமான சூழ்நிலையை காணக்கூடியதாக உள்ளது.
0 comments :
Post a Comment