Saturday, March 9, 2019

அனந்தியின் கஞ்சிக்குள் மண்ணை தூவியுள்ள அமெரிக்காவும் முழிபிதுங்கும் ஊடகங்களும்.

மன்னார் மனித புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கை நேற்றுமுன்தினம் மன்னார் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டதுடன், அம் மனிதக் கூடுகள் சுமார் 500 வருட கால பழைமை வாய்ந்தவை என்ற விடயத்தை பத்தோடு ஒன்று பதினோராவது செய்தியாக அறிவித்து விட்டு ஊடகங்கள் மௌனமாகிவிட்டன.

முள்ளிவாய்காலில் மண்கவ்வி, வெள்ளைகொடியை தூக்கிய பின்னர் ஆயுதங்களை மௌனித்துவிட்டோம் என புலிகள் இன்றும் பம்மாத்துவது போன்றே ஊடகங்களின் செயற்பாடுகளும் காணப்படுகின்றது. மேற்படி விடயம் வெளியாகியபோது, மன்னார் புதைகுழி விவகாரத்திற்கு அப்பால் நாட்டில் வேறு விடயங்கள் ஏதும் இல்லை என்றபோக்கில் அதன் ஒவ்வொரு நகர்வுகளையும் பிறேக்கிங் நியூஸ் போட்டுக்கொண்டிருந்த ஊடகங்கள் இன்று நவ துவாரங்களையும் அடைத்துகொண்டுள்ளன.

இலங்கையில் ஊழல் மோசடிகளும் , நீதிமறுப்பும் மேலோங்கி நிற்கின்றது. இவற்றுக்கு காரணமான அரசியல்வாதிகள் குறுந்தேசியவாத போர்வையினுள் மறைந்து நின்று தமது கடமைகளிலிருந்து விலகிச் செல்லும்போது அதற்கான அனுசரணையினை ஊடகங்கள் முண்டியடித்து மேற்கொள்கின்றன.

மன்னார் மனித எலும்புக்கூடுகள் தோண்டப்பட்ட காலப்பகுதியில் வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சராகவிருந்த அனந்தி சசிதரன் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தது. குறித்த மோசடிகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பில் பின்தொடர்ந்து அறிக்கையிடவேண்டிய ஊடகங்கள் அனந்தி சசிதரனை மனித எலும்புக்கூடுகளுள் மறைத்துக் காப்பாற்றினர்.

குறித்த எலும்புக்கூடுகள் படையினரால் கொன்று புதைக்கப்பட்டவர்களினதே என்றும் இவ்வாறான சூழ்நிலையில் தனக்கு இலங்கையில் வாழ்வதற்கு அச்சமாகவுள்ளதாகவும் அனந்தி சசிதரன் புருடா விட அவற்றை அள்ளிக்கொண்டு, ஐயோ அனந்திக்கு சரியான பயமாக இருக்கின்றதாம் என ஊடகங்களும் மக்களை பயமூட்டின.

பிரபாகரன் வன்னியில் சித்திரவதைக் கூடங்களை வைத்து மனித குல விரோத செயற்பாடுகளை மேற்கொண்டபோது அங்கு எவ்வித அஞ்சமும் இன்றி வாழ்ந்த அனந்தி சசிதரனுக்கு புதிதாக தற்போது எங்கிருந்து அச்சம் வந்தது என்றும், எலும்புக்கூட்டினை கண்டு அஞ்சும் உமக்கு எதற்கு அரசியல் என்றும் கேள்விகளை ஊடகங்கள் கேட்க தயங்கின.

சிறுவர்களை படையில் பலவந்தமாக இணைப்பதற்கு அனந்தியின் கணவன் எழிலன் தலைமை தாங்கியபோது என்றோ ஒரு நாள் குறித்த அநியாயத்திற்கு தானும் தனது குழந்தைகளும் பதில்கூற வேண்டிவரும் என்ற அச்சம் அனந்திக்கு ஏற்பட்டதில்லையா என்ற கேள்வியை அனந்தியிடம் இதுவரை எந்த ஊடகமும் கேட்டதாக பதிவுகள் இல்லை.

எனவே இவ்விடயத்திலாவது அனந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதை ஊடகங்கள் அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கடைமையிலிருந்து விடுபடமுடியாது.

எது எவ்வாறாயினும் மண்டையோட்டினுள் ஒழிந்து நின்று அடுத்த மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிம்மாசனம் ஏறலாம் என்றிருந்த அனந்தியின் கஞ்சியினுள் மண் தூவியதாக அமைந்துள்ளது புளோடிராவிலிருந்து வந்த அறிக்கை.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர் என்றனர். இந்திய இராணுவம் குடிகொண்டிருந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்தியங்கிய குழுக்கள் கொன்று புதைத்திருக்கலாம் என்றனர். புலிகளின் வதை முகாம்களிலிருந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்றனர். இவ்வாறான கருத்துக்களை அரசியல்வாதிகள் சுயவிளம்பரத்திற்காக தெரிவித்தபோது, அந்தந்தக் காலப்பகுதியில் தமது உறவுகளை இழந்த மக்கள் அனுபவித்திருக்கக்கூடிய உளவியல் ரீதியான வேதனைகள் தொடர்பில் அரசியல்வாதிகளோ அவர்களது அடிவருடிகளான ஊடகங்களோ கவலைப்பட்டதில்லை. ஆனால் இன்று இருதரப்பினரும் அம்மணமாகி நிற்கின்றனர்.-பீமன்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com