தீவகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இந்தியர்கள் இருவர் கைது. நகைகள் மீட்பு.
வர்த்தக வீசாவில் நாட்டினுள் நுழைந்து பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டுவந்த இரு இந்தியர்களை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் நாரந்தனை பகுதிகளிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் முறைப்பாடுகளை அடுத்து மண்டைத்தீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை பலப்படுத்திய பொலிஸார் இவர்களை மடக்கி பிடித்துள்ளனர்:
புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற இரு இந்திய பிரஜைகள் வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றதை தொடர்ந்து பிரதேச மக்கள் மண்டைத்தீவு பொலிஸ் காவல் அரணுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்தனர். அதையடுத்து செயற்பட்ட பொலிஸ் குழுவினர் இக் கைதினை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வங்கி அட்டைகள் கடவுச்சீட்டுகள் கடவுள் விக்கிரகங்கள் இந்திய நாணயங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
வடபகுதியில் கொள்ளைகள் அதிரித்துள்ள நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாதிருந்த பொலிஸாருக்கு புதிய சவால் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment