Friday, March 15, 2019

பலகோடி மக்கள் வியந்து பார்க்க, தொழுகைக்குச் சென்ற அப்பாவிகள் சுட்டு வீழ்த்திய கொடுரம் நியூசிலாந்தில்.

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரத்தில், எந்த நேரத்திலும் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் காட்சிகளை பார்க்கலாம். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களிலும் மக்கள் தொழுகை நிமித்தம் கூடி இருந்தார்கள்.

இவ்வாறு பள்ளிவாசல்கள் நோக்கி தொழுகைக்காக வந்த அப்பாவி மக்களைக் கொடூரமாக சுட்டுக்கொலை செய்து, அந்த காட்சியை நேரலையாக முகப்புத்தகத்தில் பதிவேற்றிய மனித மிருகம் பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் தீயாய் பரவி வருகின்றன.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள், இன்று நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் எனும் நகரிலுள்ள புகழ்பெற்ற மஸ்ஜித் அல் நூர் எனும் மசூதிக்கு தொழுகைக்காக சென்ற போது, பள்ளிவாசலே இரத்த பூமியாக தோற்றமளித்துள்ளது.

பீதியடைந்த வீரர்கள், பள்ளிவாசலில் இராணுவ உடையில் இருந்த ஒருவரை நோக்கி, மற்றுமொரு துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதை பார்த்ததும் செய்வதறியாது, தரையில் படுத்தனர். பின்னர் கிரிக்கட் வீரர்களை பாதுகாப்பாக அவர்களது விடுதிக்கு, நியூசிலாந்து போலீசார் அழைத்துச் சென்றனர்.

எனினும் பள்ளிவாசலில் இருந்த பொதுமக்களில் 49 பேரை, அந்த நாட்டு பொலிஸாரால் காப்பாற்ற முடியவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பலர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டின் முதல் கட்டமாக 6 பேர் பலியானதுடன், தற்போது பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

இந்த துப்பாக்கிசூட்டை அடுத்து, அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பள்ளிவாசலை சுற்றிவளைத்து பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து ஒரு பெண் உள்ளிட்ட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த துப்பாக்கிச்சூட்டை, கொலை குற்றவாளி நேரலையில் ஒளிபரப்பியமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி தனது உடலில் பொருத்தப்பட்ட கேமராவின் துணையுடன், இத்தாக்குதலை முகப்புத்தகத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளான். அத்துடன் சுமார் 73 பக்கங்களில் துப்பாக்கிதாரி தனது நோக்கங்களை எழுதியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த கொடூரம் பலகோடி பயனாளர்களின் கண்முன்னே, முழு சுதந்திரமாக நிகழ்ந்துள்ளமை, மனிதத்தின் மீது, மிகப்பெரும் வெறுப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












No comments:

Post a Comment