Saturday, March 2, 2019

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருக்க வேண்டும் என்பதே, எனது நிலைப்பாடு - அமைச்சர் மனோ

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒருபோதும் ஒழிக்கப்பட கூடாது என்று, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அமைச்சர் மனோ கணேசன் இந்த கருத்தை முன்வைத்தார்.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தே, அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிப் பீடம் ஏறின. எனினும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை அமுலுக்கு வரவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒருபோதும் ஒழிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்திலேயே, எமது தரப்பு உள்ளது. எனினும் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் உள்ள தன்னிசையான அதிகாரங்கள், பெருமளவு குறைக்கப்பட வேண்டும்.

இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19 ஆவது திருத்தத்தின் மூலம், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள பல சரத்துகளை குறைத்துள்ளார்.

எனவே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரித்தைக் கைப்பற்றும் ஜனாதிபதிக்கு, இப்போதுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் மிக குறைவானதாகவே இருக்கும். எனினும் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான முதல் குடிமகனே தேவைப்படுகிறார்.

அதற்கு இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருக்க வேண்டும். இதற்காக எமது தரப்பு மக்கள் விடுதலை முன்னணியுடன் கலந்துரையாடத் தயாராகவே உள்ளது என, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment