Friday, March 29, 2019

ஐ.தே.கவின் அந்த மூவரில் யார் ஜனாதிபதி வேட்பாளர்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சை அக்கட்சிக்குள் பூதாகரமாக வெடித்துள்ளது. பின்வரிசை மந்திரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் தலைவர் ரணிலை எதிர்க்கும் அதேநேரத்தில் சஜித் பிறேமதாஸவை தெரிவாக முன்வைக்கின்றனர்.

இந்த இருவரையும் எதிர்ப்போரும் கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என நினைப்போரும் கரு ஜெசூரியவை விரும்புகின்றனர்.

எது எவ்வாறாயினும் வழமைபோல் இம்முறையும் பரந்தரப்பட்ட கூட்டணியின்கீழ் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கே ஐக்கிய தேசியக்கட்சி தயாராகிவருகின்றது. மேதினக் கூட்டத்தின்போது கூட்டணி குறித்த அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போது பொதுவேட்பாளரை களமிறங்குவதற்காக விட்டுக்கொடுப்புகளைசெய்த ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை தியாகத்துக்கு தயார்நிலையில் இல்லை.

தமது கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்க வேண்டும் என்பதில் ஐ.தே.க. எம்.பிக்கள் உறுதியாக நிற்கின்றனர். தமது கோரிக்கைக நியாயம்தான் – அதில் மாற்றம் செய்யமுடியாது என்பதற்கு பொதுவேட்பாளராகக் களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரியை உதாரணம் காட்டுகின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என அவருக்கு சார்பானவர்கள் அறிவிப்பு விடுத்தாலும், அதற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனவே, சஜித் பிரேமதாச அல்லது கருஜயசூரிய ஆகிய இருவரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் என கூறப்பட்டாலும், ரணிலே களமிறங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்பதை சஜித் பிரேமதாச வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். சபாநாயகர் கருஜயசூரிய தனது நிலைப்பாட்டை மறைமுகமாக கண்டியில் வைத்து அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இறுதிநேரத்தில் வியூகம் மாற்றியமைக்கப்படலாம் என்றும் கதை அடிபடுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com