இலங்கை மக்களுக்கு, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் விடுத்த அவசர எச்சரிக்கை
இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழையுடான காலநிலையின் போது ஓரளவு காற்றும் வீசக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் உலர் காலநிலை காரணமாக பொதுமக்கள் உடல் நலக்கோளாறுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நாட்களில் நிலவும் கடுமையான் வெப்பநிலை காரணமாக ஆரோக்கிய சீர்கேடுகள் அதிகமாக ஏற்படலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சீர்கேடுகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம், உடலை மூடும் வகையில் இளம் நிறங்களுடன் கூடிய இலேசான ஆடைகளை அணிவது சிறப்பானது. குறிப்பாக விவசாய, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகையில் சூரியக் கதிர்களின் நேரடித் தாக்கத்தைத் தவிர்ப்பது சிறப்பானதாகும். தினந்தோறும் குளிப்பது பொருத்தமானது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
அதிக சூரிய வெப்பம் இருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் திறந்த வெளிகளில் விளையாடுவதைத் தவிர்ப்பது நல்லது. கூடுதலான வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை தனியே வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக இனிப்புடனும், மதுசாரத்துடனும் கூடிய பானங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாகும்.
0 comments :
Post a Comment