Tuesday, March 12, 2019

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினுள்ளும், தமிழ் பிரிவினை- வாதத்தினுள்ளும் சிக்குண்டுள்ள கல்முனை பிரதேச செயலகம். பீமன்.

கல்முனை உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் 1987 ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழ் முஸ்லிம் பிரிவுகளாக பிரிக்கப்பட்டபோது, அங்கே திரு காலித் (அல்லது காலிதீன் சரியாக நினைவில்லை) உதவி அரசாங்க அதிபராக இருந்தார். ஒரு சோனி பாரபட்சம் காட்டுகின்றான் என, அவர் காலத்தில் பேசப்பட்டதாக ஞாபகம் இல்லை. அந்த அலுவலகத்திலே அன்று 90 விழுக்காடு உத்தியோகித்தர்கள் தமிழர்களாகவே இருந்தனர்.

சிரங்குகளை உருவாக்கி அந்த சிரங்கினை உரசி, பெருப்பித்து வாழும் பிச்சைக்காரர்களான அரசியல்வாதிகள் இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, வாக்குகளை அபகரிக்கும் நயவஞ்சக
சிந்தனையிலேயே குறித்த உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தை பிரித்துள்ளார்கள் என்பது இன்றைய நடைமுறையை பார்கின்ற போது தெளிவானாலும், நிகழ்காலச் செயற்பாடுகள பிரிந்து தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பலவந்தமாகவே தள்ளுகின்றது.

1993 ம் ஜூலை மாதம் 28ம் திகதி கூடிய அமைச்சரவை, கல்முனை பிரதேச செயலகம் (தமிழ் பிரிவு) உட்பட்ட 28 உப பிரதேச செயலர் அலுவலகங்களை தரமுயர்த்த அங்கீகாரம் வழங்கியது. (அன்றைய உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சின் ராஜாங்க செயலாளரின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.) இருந்த போதும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அல்லது கல்முனை பிரதேச செயலகம் (தமிழ் பிரிவு) என்று அறியப்படுகின்ற பிரதேச செயலகம் இன்று வரை தரமுயர்த்தப்படவில்லை.

அது தரமுயர்த்தப்படாமைக்கான காரணம் தெட்டத் தெளிவாகியுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் நேரடியாகவே அதற்கான தடையை போடுகின்றனர். தமிழ் மக்கள் தமது அரச கருமங்களை செய்து கொள்ளக்கூடிய அந்த காரியாலயத்தை தமது விருப்பிற்கேற்றவாறு அமைத்துக் கொள்வதால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கள், பின்னடைவுகள், பாதிப்புக்கள் யாது என்று கேட்கின்ற போது நொண்டிச் சாட்டுக்கள் கூறப்படுகின்றன.

முதலாவது காரணம், அரச நிர்வாக திணைக்களங்கள் இன, மத ரீதியாக பிரிக்க முடியாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறாயின், ஓட்டமாவடி , காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் காணப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளை எவ்வித நிலத் தொடர்பு அற்ற முறையில் இணைத்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலையம் என்றதோர் வலையம் உருவாக்கப்பட்டமை, திருக்கோயில் கல்வி வலயத்திலிருந்து பிரித்து பொத்துவில் கல்வி வலையத்தை அமைத்துக் கொண்டமை, கல்முனையிலிருந்து பிரித்து சாய்ந்தமருது தனி பிரதேச சபைக்கான கோரிக்கை, கோறளைப்பற்று பிரதேச செயலகத்திருந்து ஓட்டமாவடி தனி பிரதேசம் உருவாக்கியமை தொடர்பான நியாயப்பாடுகள் யாது என்ற கேள்விக்கு இதுவரை பதிலளிக்கப்படாத நிலையில், கடைந்தெடுத்த இஸ்லாமிய அடிப்படை வாதியாக அடையாளம் காணப்படுகின்ற வை.எல்.எஸ் ஹமீத் கூறுகின்ற நியாயம் யாதெனின், புலிப் பயங்கரவாதிகள் தொடர்சியாக முஸ்லிம் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அவர்களின் பள்ளிவாசல்களில் கூட அம்மக்களை கொன்றொழித்ததாகவும், அதற்கு நஷ்டஈடாக கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என்கின்றார்.

சட்ட முதுமானியான ஹமீத்திடம் நான் கேட்கின்ற கேள்வியாதெனில் இலங்கையின் எந்த சட்டம் இவ்வாறான கோரக்கைக்கு இடம் விடுகின்றது என்பதாகும்.

மேலும் புலிகள் முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்தார்கள், அவர்களை மனித நேயம் அற்று கொன்று குவித்தார்கள் என்பதெல்லாம் நியூட்டனின் 2ம் விதியான , ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமும் எதிருமான மறுதாக்கம் உண்டு, என்பதற்கு உட்பட்டது தான். புலிப்பயங்கரவாதிகள் தமிழ் மக்களின் தலைவர்களை கொன்று குவிக்கும்போது, அவர்களுக்கு முஸ்லிம்கள் அனுசரணையும் அடைக்கலமும் கொடுத்ததன் பிரதிபலனையே நீங்கள் அனுபவித்தீர்கள்.

இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த போது, சகோதரப்படுகொலை உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அச்சந்தர்ப்பங்களில் துருக்கி தொப்பியணிந்தே புலிப்பயங்கரவாதிகள் தமிழ் மக்களின் தலைவர்களையும், மக்களையும் சக இயக்க உறுப்பினர்களையும் கொன்றொழித்தார்கள். அச்சந்தர்ப்பங்களில் முஸ்லிம் கிராமங்களில் எவ்வாறு பயங்கரவாதிகளுக்கு செங்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது என்பதனை சற்று மீட்டிப்பாருங்கள் ஹமீத்.

புலிப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட வன்செயல்களுக்காக முஸ்லிம்களோ, சிங்களவர்களோ ஒட்டுமொத்த தமிழ் மக்களை பழிவாங்க நினைப்பார்களாயின் அல்லது அவர்கள் அதற்கு பொறுப்பாளிகள் என்று கூறுவார்களாயின் அதைப்போல் அறம்கெட்ட செயல் இருக்கமுடியாது. புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையை (படையினரின் எண்ணிக்கையை தவிர்த்து) ஒப்பீடு செய்து பார்ப்பீர்களாயின், புலிகளால் பாதிக்கப்பட்ட முதலாவது இனம் தமிழினம் என்பது எவருக்கும் புரியும். அவ்வாறான நிலையில் புலிகள் செய்த தவறுக்காக தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கு குறுக்கே நிற்பது எவ்வாறு நியாயமாகின்றது?

புலிகள் மேற்கொண்ட வன்செயல்களை சுட்டிக்காட்டி தமிழ் மக்களை நோகடிக்க அல்லது பழிவாங்க எத்தனிக்கும் அல்லது தொடர்ந்தும் முஸ்லிம் - தமிழ் மக்களின் உறவில் விரிசலையே ஏற்படுத்த முனையும் ஹமீத் போன்றவர்களே! உங்கள் மனச்சாட்சியை (இருந்தால்) தட்டிக் கேளுங்கள், எத்தனை அப்பாவித் தமிழர்களை முஸ்லிம்கள் கொன்றொழித்தார்கள்?

புலிகள் எங்காவது ஓர் முஸ்லிம் மீது கை வைத்துவிட்டால் உங்கள் கிராமங்களில் தொழிலுக்காக நுழைந்திருந்த எத்தனை அப்பாவி தொழிலாளிகளை கொன்றொழித்தீர்கள். காலை 6 மணிக்கு கூலித் தொழிலுக்கு வந்தவனுக்கு 8 மணிக்கு காலை உணவை கொடுத்து விட்டு மதிய உணவுக்காக தனது உதிரத்தை வியர்வையாக உங்கள் வாசற்படியில் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் எத்தனை பேரை வெட்டி
கடலில் வீசியிருக்கின்றீர்கள்? இவர்கள் உங்களை நம்பி உழைக்க வந்த பாட்டாளி வர்க்கம். உழைத்து உண்ணும் வர்க்கம். உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்ற வந்த அப்பாவிகள் கூட்டம்.

அவர்களை தமிழன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக கொன்று குவித்தீர்களே! அதில் என்ன நியாயம் இருந்தது? புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். புலிகள் செய்த அராஜகங்களுக்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் சீண்ட நினைப்பது அறமற்றது.

அதேநேரம் தமிழர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக எத்தனை தமிழ் மக்களை எவ்வாறு கொன்றொழித்தீர்கள் என்பதனை, இங்கு பட்டியலிட விரும்பவில்லை. மனச்சாட்சியை தட்டிக்கேழுங்கள்.

மேலும் ஹமீத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கல்முனை நகரம் முஸ்லிம்களின் இதயம் என்றும் அங்குள்ள அரச அலுவலகங்கள் தமது முன்னோர்கள் வழங்கியவை என்றும் குறிப்பிட்டுள்ளார். கல்முனை நகரம் கல்முனை வாழ் மக்களின் இதய பூமியாக இருக்கலாம், எவ்வாறு முஸ்லிம்களின் இதயம் மாத்திரமானது?

கல்முனைக்குடி , சாய்தமருது, சம்மாந்துறை , நிந்தவூர் , மாளிகைக்காடு அக்கரைப்பற்று , அட்டாளச்சேனை, ஒலுவில் என அத்தனை கிராமங்களில் இருந்தும் வந்தவர்களுக்கு வியாபாரத்திற்காக கடைகள் தமிழர்களால் வாடகைக்கு வழங்கப்பட்டன. சிலர் விலைக்கே வாங்கினர். தற்போது அந்த நகரத்தில் பெரும்பான்மையான வியாபாரிகள் முஸ்லிம்களாகவுள்ளனர். நிலங்களையும் கொள்வனவு செய்துள்ளனர். அந்த நிலங்கள் எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டன? என்ற கதை யாவரும் அறிந்த பரகசியம்.

இலங்கையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யாத நகரம் ஒன்று கூற முடியுமா? காலியில், மாத்தறையில், அம்பநாந்தோட்டையில் கொழும்பில், கண்டியில் என சகல நகரங்களிலும் முஸ்லிம் வர்த்தகர்கள் இருக்கின்றார்கள். எனவே இந்த நகரங்களில் அமைந்திருக்கின்ற பிரதேச செயலகங்கள் முஸ்லிம்களின் ஆழுகைக்குள் இருக்க வேண்டும் என்ற கோஷத்தை ஏன் முன்வைக்கவில்லை.

கல்முனையில் அரச அலுவலகங்களை முஸ்லிம்களின் முன்னோர்களே அமைத்தார்கள் என்றால், அதனூடாக ஹமீத் சொல்ல வருவது யாது? யார் அந்த முன்னோர்கள்? அவர்கள் தங்களுடைய தாயக காணியில் அரச அலுவலகங்களை அமைத்துக் கொடுத்தார்களா? இவ்விடத்தில் அரச அலுவலகங்களை அமைத்து கொண்டதன் நோக்கம், இன்றைய உங்களுடைய நோக்கம் தானா?

இல்லை. அன்றிருந்த முஸ்லிம் தலைவர்களின் நோக்கம் அவ்வாறிருந்திராது. கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு வடக்கே பெரியநீலாவணைக்கும் தெற்கே மாளிகைக்காட்டுக்கும் மையமாக கல்முனை நகர்ப்பகுதி இருந்தது. அந்த காரியாலங்களை கல்முனைக்குடிக்கு கொண்டு செல்வதால் இரு அசௌகரியங்களை அவர்கள் கணக்கில் எடுத்திருக்கலாம்.

ஒன்று மருதமுனை மற்றும் பெரியநீலாவணை போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் நீண்ட தூரம் அரச கருமங்களுக்காக பயணிக்க வேண்டி வரும் என்ற நியாயமான நோக்கமும், இரண்டாவது கல்முனைக் குடியிலுள்ள அரச காணிகளை அரச திணைக்களங்களுக்கென எடுத்துக் கொண்டால், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு காணிப்பற்றாக்குறை நிலவலாம். ஆகையால் தமிழர் பிரதேசத்திலுள்ள காணிகளிலேயே அதனை அமைத்துக்கொள்வோம் என்ற, சற்று தமது சமூகம் சார்ந்த நோக்கமாகவும் இருந்திருக்கலாம்.

எனவே அக்காலத்தில் செயற்பட்டிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை தமது அரசியல் வங்குரோத்து தனங்களுக்காக நயவஞ்சகர்களாக மாற்ற முனைவது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் அவமானமாகும். குறிப்பாக அஹமட் மற்றும் மன்சூர் போன்ற தலைவர்கள் தமிழ் மக்களாலேயே பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதும், அவர்கள் இறுதி வரை தமிழ் மக்களுக்கு தங்களால் முடிந்தவரை விசுவாசமாக இருந்தார்கள் என்பதும் வரலாறு.

அவர்கள் கல்முனையில் அரச அலுவலகங்களை அமைத்தது, எதிர்காலத்தில் முஸ்லிம்கள் தமிழரை அடக்கி ஆட்சி செய்தவதற்கான அத்திவாரமாகவே என்று ஹமீத் நியாயப்படுத்துவாரானால், தமிழ் மக்கள் தங்களை தாங்களே நிர்வகிக்க வேண்டும் என்று முயற்சிப்பதில் தவறு எங்கே இருக்கின்றது?

மேலும் தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் முடியாது என்றும், கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சி அமைத்த போதும், அந்த முஸ்லிம் முதலமைச்சர் ஒரு தெருவின் பெயரைக்கூட மாற்றுவதற்கு கையாலகாதவராக காணப்பட்டார் என்றும், ஹமீத் தனது வக்கிரத்தை கக்குவதன் ஊடாக முன்னாள் முதலமைச்சர் நஸீர் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு வரலாற்றை திணிக்க முற்பட்டிருக்கவில்லை என்ற உண்மையை உணர்த்தியிருக்கின்றார்.

ஹமீத் குறிப்பிடுகின்ற 100 வீதம் முஸ்லிம்கள் வாழுகின்ற தெருவின் பெயர் என்ன? தரவை பிள்ளையார் கோயில் வீதி
என்ன பெயர் வைக்க முற்படுகின்றார்கள் ? கடற்கரை பள்ளிவாயல் வீதி.
100 வீத முஸ்லிம்களும், தரவை பிள்ளையார் கோயில் வீதிக்கு எப்போது வந்தார்கள்? எவ்வாறு வந்தார்கள்? என்பது கிழக்கு மாகாணத்தின் எட்டுத் திசையிலுமுள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் 90ம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் தமிழ் மக்களின் எல்லை கிராமங்கள் மீது முஸ்லிம்கள் எவ்வாறு அரச படைகளின் அனுசரணை பாதுகாப்புடன் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்பதும் அதன் நோக்கம் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.

முஸ்லிம் பிரதேசங்களை அண்மித்து வாழ்ந்த தமிழ் மக்களின் பொருளாதாரத்தை சிதைத்து அவர்களை உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தி அவர்களது சொத்துக்களை அபகரிப்பதே மேற்படி தொடர் தாக்குதல்களின் நோக்கமாக இருந்தது. அந்த வகையில் கல்முனை தமிழ் மக்களின் எல்லையாக காணப்பட்ட பிரதேசங்கள் மீது, முஸ்லிம் மக்கள் அரச படைகளின் துணையுடன் தாக்குதல்களை மேற்கொள்ளுவர்.

சமைத்த உணவை சாப்பிட்டுக் கொள்ள முடியாது தமிழ் மக்கள் ஓட்டமெடுப்பர். பின்னர் பள்ளிவாசல்கள், ஆலயங்கள் இணைந்து சாமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதும் தமிழ் மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்வதும் சாதாரண நிகழ்வுகளாக இருந்தது.

ஆனாலும் அழிவுகள் கணக்கெடுக்க முடியாதவையாக இருக்கும். வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டிருக்கும். ஏதோ ஒரு வகையில் அவற்றிலிருந்து மக்கள் மீண்டெழுவர். மீண்டெழுந்த அடுத்த இரு மாதங்களில், அதே தொடர் தாக்குதல்.

இவ்வாறு நிலைமைகள் தொடரும் போது, உடைத்து எரித்து நாசமாக்கப்பட்ட குடிமனை பொருட்களை மீண்டும் புனரமைப்பு செய்வதற்கான பொருளாதார வசதியையும் மன தைரியத்தையும் இழக்கும் மக்களிடம், ஒரே தெரிவுதான் இருக்கும். அந்த தெரிவு யாதெனில் வீடு வாசலை விற்றுவிட்டு தமக்கு பாதுகாப்பென கருதுகின்றதோர் இடத்தில் குடியேறுவது. இவ்வாறான நிர்ப்பந்தத்தை வன்செயல் ஊடாக உருவாக்கி தமிழ் மக்களை விரட்டி விட்டுத் தான் இன்று தரவை பிள்ளையார் கோயில் வீதியில் 100 வீதம் முஸ்லிம்கள் வாழுகின்றார்கள்.

தரவை பிள்ளையார் கோயிலில் இருக்கும் பிள்ளையார் அனுபவித்த துயரம் மக்கள் அனுபவித்த துயரத்திலும் கோரமானது. தமிழ் மக்கள் மீது வன்செயலை கட்டவிழ்த்து விட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வன்செயலாளர்கள் பிள்ளையாரை தூக்கி கொண்டு முன்னே இருந்த குளத்தினுள் போடுவார்கள். அதன் பின்னர் குடியேறும் மக்கள் பிள்ளையாரை தேடிப்பிடித்து ஆலயத்தில் வைத்து வணங்குவார்கள். இறுதியாக கொங்கிறீட் போட்டு கம்பியால் பிள்ளையாரை பிணைத்து கட்டி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக கட்டிக்காக்கப்பட்ட ஆலயத்தின் வீதியைத் தான் மாற்றக் கேட்கிறார் ஹமீத். ஆனாலும் முன்னாள் முதலமைச்சர் முஸ்லிம் அடிப்படை வாதிகளின் மதவெறிக்கு இவ்விடத்தில் துணை போகாது
உயர்ந்து நிற்கின்றார் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

இறுதியாக இஸ்லாமிய அடிப்படை வாதம் பிரிவினைவாதத்திற்கான அத்திவாரத்தை பலமாகவே போட்டுள்ளது. எனவே தமிழ்-முஸ்லிம் மக்கள் எதிர் அரசியல் தளங்களிலிருந்து இணைந்து வாழவே முடியாது என்ற முடிவு முற்றானது.

தமிழ் அரசியல் தலைமைகள் தமது எதிர் அரசியல் வியூகத்தை மாற்றி ஆழும் கட்சியில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் பலாபலன்களையும் கோடிட்டுக் காட்டுகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் காலாகலமாக மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட சகல அரச வளங்கள் மற்றும் வாய்ப்புக்களை தாங்களே அனுபவித்து வந்த நிலையில், தமிழர் தரப்பானது அரசுடன் இணைந்து சென்றதன் ஊடாக அரச வளங்கள் சமமாக பங்கிடப்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் தவித்த முயல் அடித்துப் பழகிய முஸ்லிம் அரசியல் தலைமைகள், தங்களுக்கு தேவையானவற்றை நிபந்தனையாக்குவர். தமிழர் தரப்பானது அரசிற்கு ஆதரவு வழங்காத வெறும் எதிர் கட்சியாக இருந்திருந்தால் இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வேண்டுமானால், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மூடுவதற்கான வர்தமானி அறிவித்தலை வெளியிடு என்ற நிபந்தனையை முஸ்லிம் தலைவர்கள் விதித்திருப்பார்கள்.

ஆனாலும் தழிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் அரசினால் முஸ்லிம்களின் நிபந்தனையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழர் தரப்பு அரசுடன் இணைந்திருந்தே இவ்வாறான விடயங்களை சாதிக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது. அத்துடன் கல்முனை பிரதேச செயலக விவகாரத்தினை அரசியல்வாதிகளின் வாக்குகளுக்கான பிச்சை பாத்திரமாக தொடர்ந்தும் பயன்படுத்தாது உடனடியாக இதற்கான தீர்வு காணப்பட வேண்டும். பிரித்தாளும் சக்திகள் தொடர்ந்தும் இவ்விடயத்தை தமக்கான ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

இவ்விடயம் கடந்த 1987ம் ஆண்டிலிருந்து சகல அரசியல் மேடைகளிலும் பேசப்பட்டிருக்கின்றது. எனவே எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் இவ்விடயம் தீர்க்கப்படவேண்டும்.

1993 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கபினெட் தீர்மானத்தை அடுத்து ராஜங்க செயலாளரின் அறிவித்தல் பிரதி.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com