Friday, March 1, 2019

அரசாங்கத்திற்கு மாகாண சபைத் தேர்தல் மீது பீதி உள்ளது - எதிர்கட்சித் தலைவர்

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடைபெறும் என்பது தமக்கு சந்தேகமாக உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எல்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் இதனை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு மாகாண சபைத் தேர்தல் மீது பீதி உள்ளது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்து வருகின்றது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் மாத்திரம் எப்படியாவது இவ்வருடத்தில் நிச்சயம் நடைபெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே அரசியலில் நல்ல அனுபவங்களை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சி உறுப்பினராக முதலில் இருந்திருக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக்கூறினார்.

நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக பிரவேசிப்பவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக செல்ல வேண்டும். அப்போதுதான் பல்வேறு அனுபவங்களை பெற்று, சிறந்த அரசியல் பயணத்தை அவர்களால் மேற்கொள்ள முடியும். அதன்பின்னர் ஆளுங்கட்சி அதிகாரம் கிடைக்கும்போது பல தகுதிகளை வளர்த்து, மக்களுக்கான சிறந்த சேவைகளையும் தடையின்றி வழங்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment