பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3 வை எல் எஸ் ஹமீட்
Counter Terrorism Bill - குற்றங்களின் வரையறை- பிரதான அம்சங்கள்
இலகு வாசிப்பிற்காக தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டம் -PTA என்றும் கொண்டுவரப்பட இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் CTA என்றும் குறிப்பிடப்படும்.
தற்போதைய PTA யில் குறைவான எண்ணிக்கையான குற்றச் செயல்களே பயங்கரவாத குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனாலும் அவை விரிவான அர்த்தமுடையனவாக இருப்பதால் அதற்குள் பலவகைக் குற்றங்களும் உள்ளடங்கும் சூழ்நிலை அதை எதிர்ப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும்.
புதிய CTA குறிப்பிடுகின்ற சொற்பதங்கள் ஓரளவு விரிவு குறைந்த நேரடியானவை என்பது சற்று முன்னேற்றகரமானபோதும் அதிகமான செயல்கள் பயங்கரவாத செயல்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் பிரிவுகள் 3,6,7,8,9,10, 13,14 என்பன முக்கியமானவைகளாகும். அதேநேரம் தெளிவு குறைந்த விரிவான குறிப்பிடுதல்கள் CTA இல்லை என்பதல்ல.
இங்கு புரிந்துகொள்ள வேண்டியது விரிவும் தெளிவின்மையும் அதிகரிக்கும்போது ஆபத்து கூடுகின்றது. குறையும்போது குறைகின்றது. காரணம் விரிவின் காரணமாக அல்லது தெளிவின்மை காரணமாக பல சந்தர்ப்பங்களில் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ உண்மையில் அந்த வரையறைக்குள் வராத குற்றங்களையும் பயங்கரவாத குற்றங்களாக கருதி கைதுசெய்யப்படலாம்.
இவை எல்லாவற்றையும் குறிப்பிடுவது புரிதலுக்கும் சிரமமாக இருக்குமென்பதால் அப்பாவிகள் சிக்கவைக்கப்படக்கூடிய முக்கியமான ஒரு சில பிரிவுகள் மாத்திரம் இங்கு குறிப்பிடப்படுகின்றன.
CTA, s 3 (1) இல் உப பிரிவு (2) இல் குறிப்பிடப்பட்ட செயல்களை
a)ஒரு மக்கள் தொகையை பயமுறுத்தும் எண்ணத்துடன் - with the intention of intimidating a population
b) இலங்கை அரசாங்கத்தை பிழையாக அல்லது சட்டவிரோதமாக ஒரு செயலைச் செய்விப்பதற்காக அல்லது செய்யாமல் இருக்கவைப்பதற்காக வற்புறுத்தும்/ பலவந்தப்படுத்தும் நோக்கத்துடன் ......
இவ்வாறான பல நோக்கங்களுடன்
3(2)- a) கொலை, கொலை முயற்சி, பாராதூரமாக காயப்படுத்தல்.......
b) ஒரு மனிதனின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் - endangering the life of any person.....
C) தனியார் அல்லது பொதுச் சொத்துக்கு, பொது இடங்களுக்கு, அரச/ தனியார் போக்குவரத்திற்கு பாரதூரமான சேதம் விளைவித்தல்....
e) அரச/ தனியார் சொத்துக்களை கொள்ளையடித்தல், பறித்தல், திருடுதல்
f) பொதுமக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல்.
இவ்வாறு மேற்சொல்லப்பட்ட பிரிவுகளில் பல குற்றங்கள் கூறப்பட்டுள்ளன. அடுத்தடுத்த தொடர்களில் இன்னும் சிலவற்றைப் பார்க்கலாம். இக்குற்றங்களைக் கையாள்வதற்கு நாட்டில் சுமார் 15 சட்டங்கள் இருக்கின்றன. அவ்வாறிருந்தும் இந்த சட்டம் எதற்காக? இதுதான் இங்கு எழுகின்ற பிரதான கேள்வி.
இந்த சட்டம் தேவைப்படுவதற்கான காரணம் அந்த சட்டங்களின்கீழ் இவைகள் சாதாரண குற்றங்களாக கருதப்பட்டு சாதாரண அல்லது குறித்த சில விசேட நடைமுறைகள் பின்பற்று தண்டனைகள் வழங்கப்படும். ஆனால் அச்சட்டங்களின்கீழ் இவற்றை பயங்கரவாதமாக கருதமுடியாது. எனவே, இவற்றைப் பயங்கரவாதமாக கருதி விசேட நடைமுறை பின்பற்றப்பட்டு விசேட தண்டனை வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் தேவைப்படுகிறது.
பயங்கரவாதம் இல்லாத நாட்டில் பயங்கரவாத சட்டம் எதற்கு? அவ்வாறு என்றாவது ஒருநாள் மீண்டும் பயங்கரவாதம் தோன்றினால் அப்பொழுது ஏன் இந்த சட்டத்தைக் கொண்டுவரமுடியாது? அவ்வாறாயின் இச்சட்டத்தைக் கொண்டுவருவதன்பின்னால் அடக்குமுறை வேறுநோக்கம் அரசுக்கு இருக்கின்றது; என்பதுதான் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் இதனை எதிர்ப்பதற்கு காரணம்.
பயங்கரவாதம் இல்லாத ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்திலேயே பல ஆண்டுக்காலம் இந்தநாடு அவசரகால சட்டத்தின்கீழ் ஆட்சிசெய்யப்பட்டிருக்கின்றது. அதன்பின் பயங்கரவாதத்தின் பெயரால் பல ஆண்டுகள் அவசரகால சட்டத்தின்கீழ் ஆட்சிசெய்யப்பட்டிருக்கின்றது.
தற்போது நீண்டகாலம் காரணம் இல்லாமல் அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்த முடியாது. உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் பல எதிர்ப்புகளை அரசு சம்பாதிக்கவேண்டி வரும். குறிப்பாக இலங்கை அரசு ஏற்றுக்கொண்டிருக்கின்ற ICCPR இன்கீழ் அவசரகால சட்டம் தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பாக பல கடுமையான விதிமுறைகள் இருக்கின்றன.
இந்நிலையில் தேவைப்படும்போது அடக்குமுறை ஆட்சிசெய்வதற்கு இச்சட்டம் தேவைப்படுகிறது. அமெரிக்க செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் அமெரிக்காவால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பதம்தான் Counter-Terrorism Law. இப்பொழுது எல்லோரும் PTA ஐ நீக்கச் சொல்கிறார்கள்.
இப்பொழுது PTA ஐ நீக்கிவிட்டு சிலகாலம் கழித்து அடக்குமுறை ஆட்சி நடத்தத் தேவைப்படும்போது CTA கொண்டுவந்தால் சர்வதேச/ உள்நாட்டு விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும், பயங்கரவாதம் இல்லாதபோது இந்த சட்டம் எதற்காக என்று.
எனவே, PTA ஐ நீக்குகின்ற கையோடு CTA ஐ கொண்டுவந்துவிட்டால் விசயம் இலகுவாகிவிடும்; என அரசு நினைக்கிறது. சமூகங்களை நீதியாகவும் சமமாகவும் நடத்தும் மன உறுதி அரசிடம் இருந்தால் இந்த சட்டம் எதற்காக?
இந்த சட்டத்தை அரசு நினைத்தால் எப்படியெல்லாம் மக்களை அடக்கியாள பாவிக்கலாம்; இரண்டொரு உதாரணங்கள்.
ஒரு மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டும்போது, மஹிந்த ஆட்சியில் தண்ணீர் மாசுபடுத்தெலுக்கெதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் படையினர் துப்பாக்கி சூடு நடாத்தி உயிரிழப்புகள் ரதுபஸ்வெல எனும் இடத்தில் நடந்ததை அறிவீர்கள். இந்த சட்டத்தின்கீழ் அந்த எதிர்ப்பு நடவடிக்கையையும் பயங்கரவாத செயலாக கருதமுடியும். அதேபோல் மீதோட்டமுல்லையில் குப்பைகொட்டுவதற்கெதிராக நடந்த எதிர்பு நடவடிக்கைகளையும் பயங்கரவாதமாக கருதமுடியும்; என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமல்ல, உதாரணமாக, அண்மையில் சாய்ந்தமருதில் ஒரு கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் வாகனம் சேதப்படுத்தப்பட்டமை, அமைப்பாளரின் வீடு தாக்கப்பட்டமைகூட பயங்கரவாத செயற்பாடாக கருதமுடியும். ஏனெனில் ஒரு அரசை ஒரு செயலைச் செய்யவைப்பதற்கு வற்புறுத்துவதற்காக தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை; என்று அதற்கு நியாயம் கூறமுடியும்.
பெரும்பான்மை சமூகத்தைப் பொறுத்தவரை இச்சட்டம் பெரிதாக பாவிக்கப்படாவிட்டாலும் ஆட்சியாளர் ஒரு இனவாதியாக இருந்தால் சிறுபான்மைகளின் சாதாரண குற்றங்களும் பயங்கரவாதமாக கருதப்படலாம்.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கு மத்தியில் ஜிஹாத் இருக்கின்றது, அல்கைடா இருக்கின்றது, ஆயுதங்கள் இருக்கின்றன, சம்பிரதாய முஸ்லிம்கள், தீவிரவாத முஸ்லிம்கள் என ஏற்கனவே பிரச்சாரம் செய்கிறார்கள். அந்நிலையில் இவ்வாறான சட்டங்கள் எவ்வாறு பாவிக்கப்படலாம்; என சிந்தித்துப் பாருங்கள்.
ஒரே செயல் ஒரு பெரும்பான்மையைச் சேர்ந்தவர் செய்யும்போதும் ஒரு முஸ்லிம் செய்யும்போதும் எவ்வாறு வித்தியாசமாக அணுகப்படலாம்; என்பதற்கு திரு ஜிஹான் குணதிலக அவர்கள் கூறியிருக்கின்ற உதாரணத்தை அடுத்த பதிவில் பார்ப்போம், இன்ஷாஅல்லாஹ்.
தொடரும்
0 comments :
Post a Comment