36 பிரதான காரணங்களை முன்வைத்து ஆசிரிய அதிபர்களின் சேவை புறக்கணிப்பு போராட்டம்
அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆசிரியர் – அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு, 3 மாத காலத்தின் நிலுவைத்தொகையை வழங்காமை உள்ளிட்ட 36 பிரதான காரணங்களை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டின் பின்னர் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய சம்பளத் திட்டத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, அதிபர் மற்றும் ஆசிரியர் துறையின் சங்கங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சில ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து இன்று பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்கள். இதேவேளை, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இன்று காலை 10 மணியளவில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் யோசனைத் திட்டமானது, அரச தரப்பின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலான விசேட ஆணைக்குழுவிற்கு அனுப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment