Saturday, March 16, 2019

3 வயது முஸ்ஸாட் இப்றாஹிமையும் விட்டு வைக்காத பயங்கரவாதி

நேற்று நியூசிலாந்து கிறிஸ்சேர்ச் பகுதியிலுள்ள இரு பள்ளிவாயல்களில் இடம்பெற்ற மதவெறித்தாக்குதலில் உயிரிழந்துள்ள 49 பேரில் 3 வயதுடைய முஸ்ஸாட் இப்றாஹிமும் அடங்குகின்றார்.

இத்தாக்குதலை நாடாத்திய பயங்கரவாதி 36 நிமிடங்களில் 49 உயிர்களை எடுத்துள்ளான். இறந்தவர்களில் மேலும் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் அடங்குகின்றான்.



36 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் 11 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2, 4 வயதுடைய சிறார்கள் இருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக நியுசிலாந்து முழுவதுமாக தெருக்களிலும் திறந்த வெளிகளிலும் மக்கள் மலர்களை வைத்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



நியுசிலாந்தின் பிரதமர் தனது நாடு கொலையாளிகளுக்கான நாடு அல்ல என்று கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாகச் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றார்.

நியுசிலாந்திலுள்ள அகதிகள் முகாம் ஒன்றுக்கு கறுப்பு உடையணிந்து முஸ்லிம் பெண்கள் போன்று முக்காடு அணிந்து சென்ற அவர் ஆறுதல் செலுத்துவதை காணலாம்.





இதேநேரம் கொலையாளியான அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய Brenton Harrison Tarrant என்பவன் கொலைக் குற்றச்சாட்டுடன் நேற்று பிற்பகல் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளான்.



இவன் முதலாவது பள்ளிவாயலில் தாக்குதல் நடாத்திவிட்டு 5 கிலோமீற்றர் தொலைவில் இருந்த இரண்டாவது பள்ளிவாயலுக்கு 7 நிமிட நேரத்தில் சென்றுள்ளான் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  இரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படும் காட்சி.



Brenton Harrison Tarrant குறித்த பயங்கரவாத தாக்குதலை நடாத்துவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் தனது விஞ்ஞாபனத்தை நியுசிலாந்து , அவுஸ்திரேலிய பிரதமர்களுக்கும் பிரபல ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளான்.



73 பக்கங்களை கொண்ட அந்த விஞ்ஞாபனம் The Great Replacment என தலைப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆவனத்தை அவன் பள்ளிவாயல் வாசலுக்கு வந்திறங்கிய பின்பே அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பயங்கரவாதி கடந்த கார்த்திகை மாதம் 27ம் திகதி துப்பாக்கிக்கான அனுபதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஒரு மாதத்தின் பின்னர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்துகொண்ட அதேநேரம் துப்பாக்கி சூட்டு கழகம் ஒன்றில் இணைந்து குறிபார்த்துச் சுடும் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது.

இவ்விடயத்தை கருத்திலெடுத்த நியுசிலாந்து பிரதமர் துப்பாக்கி (semi-automatic weapons) அனுமதிப் பத்திரங்களுக்கான சட்டத்தில் உடனடி மாற்றத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், மாற்றம் உடனடியாக மேற்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் உறுதி செய்துள்ளார்.

இதேநேரம் குறித்த தாக்குதலின்போது பள்ளிவாயல் ஒன்றினுள் இருந்து உயிர் தப்பிய சினாபா என்ற நபர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் , பிரித்தானியா என்று நம்மவர்கள் தாக்கும்போது என்றோ ஒருநாள் நாமும் தாக்கப்படுவோம் என்பதை உணர்ந்திருந்தாக கூறுகின்றார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com