Friday, March 29, 2019

உலகத்தில் அதிக செலவுடன் நடாத்தப்படவுள்ள இந்திய மக்களவைத் தேர்தல் - 2019

இந்தியாவின் 29 மாநிலங்களிலும் 7 யூனியன் பிரதேசத்திலுமுள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்குமான 17வது மக்களவைத் தேர்தல் (பாராளுமன்றத் தேர்தல்) எதிர்வரும் ஏப்ரல் 11ந் திகதி தொடங்கி, மே 19ந் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குகள் எண்ணும் வேலைகள் மே 23ந் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.

இந்தத் தேர்தலில் 8.4 கோடி புதிய வாக்காளர்களுடன் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக உள்ளனர். 2014 ஆம் ஆண்டு 9 இலட்சமாக இருந்த வாக்குச்சாவடிகள், இம்முறை 10 இலட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதிலும் கிட்டத்தட்ட 1866 அரசியல் கட்சிகள் போட்டியிடுவதாகத் தெரிய வருகின்றது. தேர்தலுக்காக ஏறத்தாள 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இந்தத் தேர்தலே, உலகத்தில் அதிக செலவுடன் நடாத்தப்படும் தேர்தலாக அமையுமென்றும் கூறப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக்கட்சி (பாஜக) 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றது. ஆனால் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை ஆட்சிபீடத்திலிருந்த இந்திய காங்கிரசுக்கட்சியோ, தனித்து 44 தொகுதிகளில் மாத்திரமே வென்று மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.

தமிழகத்தின் 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அத்தினத்தில் நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் கட்சியான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (திமுக) இணைந்து காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியன போட்டியிடுகின்றன.

அதேவேளை தமிழ்நாட்டு மாநில தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி (ஈ.பி.எஸ்) – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (அதிமுக) இணைந்து பாரதிய ஜனதாக்கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் என்பன போட்டியிடுகின்றன. தற்போதைய இந்திய மக்களவையில் 37 ஆசனங்களுடன் அதிமுக மூன்றாவது பெரிய கட்சியாகத் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2016 இல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்து, முதல்வராகி, 2017 இல் மறைந்த ஜெயலலிதாவின் பின்னர், அதிமுகவினுள் எழுந்த பலவிதமான உட்பூசல்களின் போது தமிழகத்தில் புதிய தேர்தலொன்றினை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாது, ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினரை இணைத்தும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியெனக் கருதப்படும் சிறையிலுள்ள சசிகலாவையும் அவரது அணியினரையும் அதிமுகவிலிருந்து முற்றுமுழுதாக ஓரங்கட்டுவதற்கும், அதிமுகவின் தேர்தல் வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினருக்கே பெற்றுக் கொடுக்கவும் துணைபுரிந்த பாஜக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே, இம்முறை அதிமுக பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகத் தெரிகின்றது. இக்கூட்டு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு பலம் சேர்க்குமேன பொதுவாகப் பல தரப்பினரிடையேயும் எதிர்பார்ப்பு ஒன்றினைத் தோற்றுவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் நடிகர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் மற்றும் சிறையிலுள்ள சசிகலாவின் அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் (அமமுக) என்ற இரு புதிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் இதுவரையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களிற்கு தேர்தல் சின்னம் எதுவும் தேர்தல் ஆணையத்தினால் ஒதுக்கப்படவில்லை. தேர்தலுக்கு இன்னமும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் சின்னம் எதுவுமின்றி தேர்தலில் எப்படி பிரச்சாரம் செய்வதென்று அறியாமல் அமமுக திண்டாடிய வண்ணமுள்ளது. எங்கள் கட்சியில்தான் படித்தவர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு (வேட்பாளர்களில் 3 டொக்டர்கள், 1 ஐபிஎஸ், 5 வக்கீல்கள் உள்ளளனர்) எனக்கூறியவாறு தேர்தலில் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் ஆதரவு பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காதெனவும் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள்தான் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் என்றும் கருத்து கணிப்புகளில் இருந்து தெரிய வருகின்றன. சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் (தெலங்கானா, மிசோராம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்) பாஜக தோல்வியைத் தழுவியுள்ளதால், 2014 ஆம் மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடியது போன்று, பாஜகவிற்கு இந்தத் தேர்தல் அமையாது என்பது தெட்டத் தெளிவாகத் தெரின்றது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்களை அழித்தோம், விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில் மிஷன் சக்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம் என்று பிரச்சாரங்கள் செய்து பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கின்றார்.

பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் ஏழை – நடுத்தரவர்க்க இடைவெளி, விவசாயிகளின் தற்கொலைகள், இந்து அடிப்படைவாதம், சாதிக்கொலைகள், பெண்களின் பாதுகாப்பின்மை, ஜம்மு காஷ்மீர் விவகாரம், பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன இன்றைய இந்தியாவின் பிரதான பிரச்சனைகளைத் தீர்ப்பதையே எதிர்கால ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: வானவில் இதழ் 99

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com