Monday, March 18, 2019

14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த வடக்கு ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளதாக, வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே, ஆளுநர் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2 சதவீதமாக காணப்படும் அதேவேளை, ஏனைய மாகாணங்களின் தேசிய பாடசாலைகள் 3.5 சதவீதமாக காணப்படுவதனால், வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகளையும் சராசரியாக 3.5 சதவீதமாக கொண்டுவரும் நோக்கில் 14 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் குறித்த 14 பாடசாலைகளும் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் கட்டாயம் பிரதிநிதித்துவம் செய்யவேண்டுமென்றும், அவற்றை தெரிவு செய்து அனுப்பும் பொறுப்பு அந்தந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கே உள்ளதெனவும், அவர்கள் கூடியவிரைவில் பாடசாலைகளை தெரிவுசெய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com