Thursday, March 28, 2019

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 1 + 2 வை எல் எஸ் ஹமீட்

மேற்படி சட்டமூலம் தொடர்பாக இன்று பலரும் பேசுகிறார்கள். அது இன்னும் சட்டமூலமாக இருந்தபோதிலும் சிலர் C T A என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இது ஆபத்தானது; என்று பலரும் குறிப்பிட்டபோதும் இது எவ்வாகையான ஆபத்து என்பது குறித்து, குறிப்பாக பெரிதாக ஆக்கங்கள் தமிழில் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக சற்று ஆராய்வோம்.

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ( PREVENTION OF TERRORISM ( temporary provisions ) ACT NO 48 of 1979 என்றொரு சட்டம் இருக்கிறது. இந்த சட்டம் அதன் பிரிவு 29 இல் மூன்று வருடங்களுக்கே இச்சட்டம் உரியது; என்று கூறப்பட்டது. அதனால்தான் temporary -தற்காலிக என்ற சொல் மேலேபோடப்பட்டது. ஆனால் 1982ம் ஆண்டு 10 ஆம் இலக்க சட்டத்தின்மூலம் பிரிவு 29 நீக்கப்பட்டு அது நிரந்தர சட்டமாகிவிட்டது.

இந்த சட்டம் மிக மோசமான ஒரு சட்டம் என்று ஆரம்பத்திலிருந்தே இதற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. யுத்தம் நிறைவு பெற்றபின் இதன் நீடிப்பு குறித்து தேசியரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இந்நிலையில் ஐ நா மனித உரிமை ஆணையத்தில் 2015 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட இல 30/1 தீர்மானத்தில் இந்த சட்டத்தை ( PTA) நீக்கிவிட்டு சர்வதேச நடைமுறைகளையொத்த பயங்கரவாதத்திற்கெதிரான ஒரு சட்டத்தைக் கொண்டுவர இலங்கை உடன்பட்டது.

அதனைத் தொடர்ந்து “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” ( CTA) என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது. இதிலும் பாரிய ஆபத்துக்கள் இருக்கின்றன. மனித உரிமைகள் மீறப்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது; என்று தற்போது தேசிய, சர்வதேச ரீதியாக எதிர்ப்புக் கிளம்பியிருக்கின்றது.

எனவே, இவ்விரு சட்டங்களிலுமுள்ள பிரதான அம்சங்கள், பாதிப்புக்கள் குறித்து இன்ஷா அல்லாஹ், அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம்.

============================
பாகம் 2

“பயங்கரவாத தடைச் சட்டத்திற்கெதிற்குப்” பதிலாக ( PTA) கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப்பற்றி ( CTA) பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இரண்டுமே பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள். “பயங்கரவாதம்” என்றால் என்ன?

உலகில் சகல நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவிலக்கணம் “ பயங்கரவாதம்” என்ற சொல்லுக்கு இல்லை. பயங்கரவாதம் என்ற சொல் Latin மொழியின் வினைச்சொல்லான ‘terrere’ என்ற சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் ‘ to frighten ‘ அதாவது ‘ பயமுறுத்துவது’ என்பதாகும்.

1970, 80 களில் அவ்வாறான ஒரு வரைவிலக்கணத்தை வரைய ஐ நாவில் எடுக்கப்பட்ட முயற்சிகளும் உடன்பாடு ஏற்படாததால் கைகூடவில்லை. 2004ம் ஆண்டு ஐ நா பாதுகாப்பு சபையில் ஒரு “மாதிரி” வரைவிலக்கணம் முன்மொழியப்பட்டது. [Security Council Resolution 1566 (2004)]. ஆனாலும் உத்தியோகபூர்வமான, திட்டவட்டமான உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட ஒரு வரைவிலக்கணம் இதுவரை இல்லை.

இதன்காரணமாக, ஒவ்வொரு நாடும் தான் விரும்பியவாறு, தனது தேவைக்கேற்ப “ பயங்கரவாதம்” என்ற சொல்லை வரையறை செய்கிறது. இலங்கையில் இச்சொல்லை PTA இல் வரையறை செய்யப்பட்டதற்கும் இப்பொழுது CTA இல் வரையறை செய்யப்பட்டிருப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

ஒரு குற்றச்செயல் சாதாரண குற்றமா? அல்லது பயங்கரவாத குற்றமா? என்பது இந்த வரையறை அல்லது வரைவிலக்கணத்தில் தங்கியுள்ளது. ஒரே குற்றச்செயல் ஒரு சாதாரண குற்றமாயின் கைதுசெய்யப்பட்டதில் இருந்து தண்டனை வழங்கும்வரை நடைமுறைகள் ஒரு வகையாகவும் அது பயங்கரவாதமானால் இன்னொரு வகையாகவும் இருக்கும்.

ஒரு அப்பாவி சிலவேளை மாட்டுப்பட்டால் அச்செயல் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் வந்துவிட்டால் அவனது நிலைமை மிகவும் கஷ்டமானதாகும். இந்நிலையில் என்னென்ன குற்றங்களை அல்லது எவ்வாறான செயல்களை பயங்கரவாதமாக புதிய சட்டத்தில் வரையறை செய்கிறார்கள்; என்பது முக்கியமாகும்.

இந்த வரையறைகளை அறிந்தால் எதிர்காலத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்துத்தான் இச்சட்டம் கொண்டுவரப்படுகின்றதோ என்றுகூட நினைக்கத் தோன்றும். அதாவது அப்பாவிகளை மிகவும் இலகுவாக பயங்கரவாதிகளாக்க இச்சட்டம் பாவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

குறிப்பாக, இன்று உலகில் ஒரு மேற்கத்தைய நாட்டைச் சேர்ந்தவன் ஒரு குற்றத்தை அல்லது பயங்கரவாத செயலைச் செய்தால் அது ஒரு குழுவின் அல்லது ஒருவனின் குற்றம் அல்லது பயங்கரவாதம் என்றும் அதே செயல் ஒரு முஸ்லிமால் செய்யப்பட்டால் அது இஸ்லாமிய பயங்கரவாதம் என்றும் முத்திரை குத்தப்படுகின்றது.

சுருங்கக்கூறின் இன்று உலகெலாம் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகின்ற ஒரு காலகட்டத்தில் இலங்கையிலும் இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள்தான் இலக்கு வைக்கப்படுகின்றார்களா? என்ற சந்தேகம், கேள்வி, பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு இச்சட்டத்தில் வழங்கப்படுகின்ற வரையறையை/ சட்டப்பிரிவுகளைப் பார்க்கின்றபோது எழுவதைத் தவிர்க்கமுடியாது. அவ்வாறு தற்போது நோக்கம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இச்சட்டம் அந்தக்கோணத்தில் பாவிக்கப்பட மாட்டாது; என்பதற்கு உத்தரவாதமில்லை. இந்தப் பின்னணியில்தான் இச்சட்டமூலத்தை முஸ்லிம்கள் ஆராயவேண்டி இருக்கின்றது.

பயங்கரவாதச் சட்டம் ஏன் தேவை?

சட்ட விளக்கங்களை ஒரு புறம் வைத்துவிட்டு ஒரு பாமர மகனின் அல்லது ஒரு பொதுமகனின் கோணத்தில் இருந்து பார்த்தால் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதம் தலைநீட்ட ஆரம்பித்த காலமது. அச்சட்டம் பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்தியதா? அல்லது பயங்கரவாதம் வளர்ந்ததா?

நாடுபூராகவும் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களைத் தடுத்ததா?

வடக்கில் பல ராணுமுகாம்கள் நிர்மூலப்படுத்தப்படுவதைத் தடுத்ததா?

கொழும்பில் மூன்று பெரும் தலைவர்கள், திரு பிரேமதாச, காமினி, லலித் அத்துலத்முதலி போன்றவர்களின் உயர்களைக் காப்பாற்றியதா?

முப்பது வருடங்கள் பயங்கரவாதம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டதை தடுத்ததா?

பயங்கரவாத காலத்திலேயே பயங்கரவாதத்தைத் தடுக்கமுடியாத பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரவாதம் இல்லாதபோது எதைத் தடுக்கப்போகிறது?

இந்த நாட்டில் சாதாரண குற்றவியல் சட்டங்கள் இருக்கின்றன. அந்தச் சட்டங்கள் சாதாரண காலத்திற்குப் போதாதா? தனது நாட்டு குற்றவியல் சட்டங்கள்மீது அரசுக்கு நம்பிக்கையில்லையா? அல்லது நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் என அரசு அஞ்சுகிறதா? அப்படியானால் எவ்வளவு காலத்திற்கு அஞ்சும்? எவ்வளவு காலத்திற்கு பயங்கரவாத சட்டத்தின் துணையுடன் நாடு ஆட்சிசெய்யப்படும்.

பயங்கரவாதம் மீண்டும் தோன்றுமென்ற அச்சம் அரசுக்கு இருக்குமாயின் அதற்கான காரணம் களையப்படவில்லையா? எந்தவொரு நாட்டில் அல்லது சமூகத்தில் சமூக நீதி இல்லையோ, விரக்தி தாண்டவமாடுகிறதோ அங்கு புரட்சி தோன்றுவதற்கான வழமான சூழல் ( fertile ground)உருவாகும். ஆனாலும் அது புரட்சியாக மாறாது எதுவரை என்றால் அந்த ஒருவன் பிறக்காதவரை.

அவன் பிறந்துவிட்டால் அங்கு புரட்சி வெடித்துவிடும். இதுதான் உலக வரலாறு. லெனினின் சோவியத், மாவோ சேதுங்கின் சீனா, ஹிட்லரின் ஜேர்மனி இவ்வாறு பட்டியல் நீளும். இந்த வரிசையில்தான் பிரபாகரனும் ரோகண விஜேவீரவும் வந்தார்கள்.

இப்புரட்சிகள் சில சில எல்லைகளைத் தாண்டும்போதும் அந்த எல்லைகளுக்கு அரசு கொடுக்கின்ற வரைவிலக்கணத்தைக் கொண்டும் அது பயங்கரவாதமாக மாறுகிறது. அந்த பயங்கரவாதம் தோன்றுவதற்கான காரணிகளான சமூக நீதியின்மை, இனப்பாகுபாடு போன்றன தொடர்கின்றபோது அது வளர்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து அவற்றை அடக்க முற்படும்போது அது இன்னும் வீரியம் பெறுகின்றது. இதைத்தான் இலங்கையிலும் கண்டோம்.

எனவே, அரசுக்கு அவ்வாறு அச்சம் இருந்தால் அதற்கான காரணிகளைக் களைவதற்கு முற்படவேண்டும். அன்று ஜே வி பி கலவரத்தின் பின் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு கலவரத்திற்கான காரணமாக இளைஞர் விரக்தியை அடையாளம் கண்டது. வேலை வாய்ப்பின்மை அதில் ஒரு பிரதான அம்சமாக கண்டது.

அதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் ஜே வி பி பயங்கரவாதம் தோன்றியிருக்குமா? எனவே அரசு சிந்திக்கவேண்டும்.

குறிப்பாக, பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு சமூகம் பெரும்பான்மையாகவும் ஏனைய சமூகங்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதென்பது இயல்பானது. அதற்காக பெரும்பான்மையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் ஆட்சியுரிமை இருக்கின்றது; என்று எங்காவது விதியிருக்கின்றதா? சகலருக்கும் ஆளும் உரிமை இருக்கின்றது. ஆனாலும் பெரும்பான்மை சமூகத்திற்கே ஆட்சியுரிமை ஏகபோக சொத்து என்பதுபோல் அவர்களே ஆட்சியாளர்களாக இருக்கின்றார்கள். இதற்குக்காரணம் பெரும்பான்மை ஜனநாயக வாதமாகும். ( Majoritarian democracy/ Majoritarianism ). அதற்காக சிறுபான்மை எந்தவொரு நாட்டிலும் தாங்களும் நாட்டை ஆளவேண்டுமென்று கேட்பதில்லை. பெரும்பான்மை ஜனநாயகவாதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.

எப்போது பிரச்சினைகள் தோன்றுகின்றன?

பெரும்பான்மையாக இருப்பதால் ஆட்சியாளர்களாக அவர்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அப்பெரும்பான்மை சிறைபான்மைகளை அடக்கியாள முற்படும்போது, தாங்கள் ஆளும் வர்க்கமாகவும் சிறுபான்மை ஆளப்படும் வர்க்கமாகவும், சில நேரங்களில் அடிமைச் சமூகமாகவும் மாற்றப்படும்போதுதான் பிரச்சினை தோன்றுகிறது.

இதற்குத் தீர்வு பயங்கரவாத தடைச்சட்டமல்ல. மாறாக, இந்த ஆளும் வர்க்க மனோநிலையும் அதோடு தொடர்புபட்ட செயற்பாடுகளும் மாற்றப்பட வேண்டும்.

பெரும்பான்மை ஜனநாயகம்தான் ஒரு சமூகத்தை தொடர்ந்தும் ஆட்சியாளராக்கி ஏனைய சமூகங்களை ஆளப்படும் சமூகங்களாக்குகின்றது. இது நீதியானதல்ல. ஆனாலும் வேறுவழியில்லை.

உலகில் எந்தவொரு அறிஞனும் ஜனநாயகம்தான் சரியான ஆட்சிமுறை என்று கூறவில்லை. இருப்பவற்றிற்குள் குறிப்பாக சர்வாதிகாரத்துடன் ஒப்பிடும்போது ஜனநாயகம் சிறந்தது; என்றே கூறுகிறார்கள்.

சர்வாதிகாரம், அது சோசலிசமானால் என்ன? கம்யூனிசமானால் என்ன? மன்னராட்சியாக இருந்தால் என்ன? இராணுவ ஆட்சியாளராக இருந்தால் என்ன? மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஜனநாயகத்தில் இடமிருக்கிறது. எனவே, ஜனநாயகம் சிறந்தது; என்கிறார்கள். ஆம் அந்தவகையில் சிறந்ததுதான். ஆயினும் பல்லின நாட்டில் பெரும்பான்மை ஜனநாயகம் சிறுபான்மைகளை அடக்கியாள முற்படுவது இன்று ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது.

இந்தியா உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு. அங்குதான் மாட்டிறைச்சி கொண்டுசென்றால் மனிதனை பகிரங்கமாக அடித்தே கொன்று வீடியோவும் போடுகிறார்கள். குஜராத்தில் 2000 பேருக்குமேல் கொல்லப்பட்டதும் அதே ஜனநாயகத்தில்தான். அண்மையில் உத்தர பிரதேசில் ஜும்ஆவை பிற்படுத்த முடியாது; என்று கூறியதற்காக, பள்ளிவாசல்களையும் 250 இற்கு மேற்பட்ட வீடுகளையும் எரித்ததும் அதே ஜனநாயத்தில்தான்.

மியன்மார் ஜனநாயகத்திற்குத் திரும்பி சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்றவரின் ஆட்சியில்தான் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு கொடுமை நடந்தது.

இலங்கையும் ஒரு ஜனநாயக நாடுதான். அந்த ஜனநாயகத்தில்தான் 83 ஜூலைக் கலவரமும் நடந்தேறியது. ஆனாலும் இருக்கின்ற நடைமுறைகளில் ஜனநாயகம்தான் சிறந்தது; என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பிரச்சினை ஜனநாயகத்தில் இல்லை. பிரச்சினை பெரும்பான்மை ஜனநாயக வாதத்தில் தான் ( Majoritarian democracy/Majoritarianism ) இருக்கின்றது.

ஜனநாயகத்தை யாரும் எதிர்க்கவில்லை. பெரும்பான்மை ஜனநாயகவாதத்தைத்தான் எதிர்க்கின்றார்கள். பெரும்பான்மை ஜனநாயகத்திற்கான மாற்றுத்தீர்வு சிறுபான்மையைப் பொறுத்தவரை சமஷ்டி என்றுதான் பலர் நம்புகிறார்கள். ( Majoritarianism v Federalism) அதனால்தான் பல நாடுகளில் சமஷ்டி முறை அமுலில் உள்ளது. ஆனால் இங்கு எல்லோரும் புரிந்துகொள்ளத் தவறுகின்ற ஒரு விடயம் சமஷ்டி என்பது பிராந்தியங்களில்/ மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தேசிய சிறைபான்மைகளுக்கு சமஷ்டி மாற்றுத்தீர்வு என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் அப்பிராந்தியங்களில் வாழும் சிறுபான்மைகளை பிராந்திய பெரும்பான்மை ஜனநாயகவாதம் காவுகொள்வதை யாரும் உணர்வதில்லை.

இதன்காரணமாகத்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் குஜராத்தில் மோடியால் அந்தக் கொடுமையை நிகழ்த்த முடிந்தது.

எனவே, இந்தியா போன்ற பெரிய நாடுகள் விதிவிலக்கானபோதும் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரும்பான்மை ஜனநாயகவாதத்திற்கு இரையாகாமல் சிறுபான்மைகளை அரவணைத்து தேசிய ரிதியில் இனவேறுபாடுகளுக்கப்பால் ஜனநாயகத்தைப் பேணமுடியுமானால் பிரச்சினைகள் தோன்றாது.

ஜனநாயகத்தைப் பேணுவதற்கான பிரதான மூலம் சட்டத்தின் ஆட்சியாகும். ( Rule of Law). சட்டத்தின் ஆட்சி பெரும்பான்மை ஜனநாயகவாதத்திற்குள் நசுக்கபடுகின்றபோதுதான் பிரச்சினை தோன்றுகிறது. அப்பிரச்சினைகளை ஒரு புறம் சாதாரண சட்டங்களின் மூலமும் மறுபுறம் சட்டத்தின் ஆட்சியை நிறுவதன்மூலமும் கையாளமுற்படாமல் கடுமையான பயங்கரவாத சட்டங்களைக் கொண்டுவருவது எதிர்விளைவுகளையே தோற்றுவிக்கும். அதுதான் நாம் இலங்கையில் கற்றுக்கொண்ட பாடம்.

மட்டுமல்ல, இவ்வாறான சர்வதேச நியமங்களுக்கு முரணான கடுமையான சட்டங்கள் ‘ சட்டத்தின் ஆட்சிக்குப் ( Rule of Law) பதிலாக Rule by Law விற்குத்தான் இட்டுச்செல்லும். இதுதான் ஹிட்லரின் நாசி ஜேர்மனியிலும் நடந்தது.

எனவே, ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு குறித்த சட்டவரைபில் வழங்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம் தொடர்பாக அடுத்த தொடரில் பார்ப்போம்; இன்ஷா அல்லாஹ்.

( தொடரும்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com