Friday, February 15, 2019

மைத்திரியும், ரணிலும் இணைந்தால் மட்டுமே, அபிவிருத்திகள் இடம்பெறும் - ராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே, நாட்டின் அபிவிருத்தியை சிறப்பாக முன்னெடுத்து செல்ல முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நுவரெலியா மீப்பிலிமான பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே, வேலுசாமி இராதாகிருஸ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்பு நாட்டின் அனைத்து பணிகளும், மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டன.

அதன் பின்பு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, அபிவிருத்தி பணிகளின் வேகம் சரமாரியாக குறைவடைந்து. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறுகல் நிலையின் உச்சகட்டமாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஜனநாயக விரோத ஆட்சி மாற்றம் காரணமாக அனைத்து அபிவிருத்தி பணிகளும் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தது.

இதனால் எமது நாட்டிற்கும் இந்த மக்களுக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. ஆனால் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்பு மீண்டும் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க முடியும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. மீண்டும் இருவருக்கும் இடையில் கயிறுலுப்பு நடைபெறுகின்றது.

அரசாங்கம் என்பது இரண்டு பக்கமாக பிரிந்து நின்று விளையாடுகின்ற உதைப்பந்தாட்ட போட்டியல்ல. போட்டி என்று வருகின்ற பொழுது ஒவ்வொரு தலைவரும் தனது அணி வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார்கள்.

ஆனால் போட்டி சில வேளைகளில் சமநிலையில் முடிந்துவிடும் இதன்போது பார்வையாளர்கள் ஏமாற்றமடைவார்கள். ஆனால் அரசாங்கத்தில் அப்படி செய்ய முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தி உட்பட அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும்.

நாடு நன்றாக இருந்தால் மாத்திரமே யாரும் தேர்தலில் போட்டியிட முடியும், ஆட்சி செய்ய முடியும். எனவே அனைவரும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயற்பட முன்வர வேண்டும்“ என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com