Monday, February 25, 2019

மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவி வெளிநாட்டவருக்கு - பின்வாங்காத ஜனாதிபதி

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக, வௌிநாட்டவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்காக நாட்டில் உள்ளவர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக வௌிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலப்பகுதி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.

இதனிடையே, போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை பெற்றுள்ள சுமார் 17 கைதிகளின் பெயர்பட்டியல் அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும், மரண தண்டனை அமுலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பினை இலங்கைக்கு தெரிவித்து வருகின்றன.

சர்வதேச மன்னிப்புச் சபையினால் பகிரங்க அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாக்கப்பட்டது. அதில் மரண தண்டை நிறைவேற்றும் எண்ணத்தை விட்டுவிடும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

எவ்வாறான போதும் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com