Tuesday, February 5, 2019

ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை, பொய்யானது - மஹிந்தானந்த அளுத்கமகே.

ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட விசாரணை அறிக்கை, பொய்யானது என, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிகள்; தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த பிரேரணை மீதான விவாதம், இன்றைய தினம் கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை ஏற்று உரையாற்றிய போதே, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கீழ் எனக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் மொத்தமாக 34 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், என் மீதான ஒரு வழக்கு மாத்திரமே, பதிவு செய்யப்பட்டது. ஏனைய 33 பேருக்கு எதிராக, எந்த வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

பாரிய ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கு அதிகாரத்தை பெற்றுக் கொண்டு, ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகின்றன. ஆனால், இதுவரை ஒருவருக்கு எதிராக மாத்திரமே அவர்களால், வழக்கு தாக்கல் செய்ய முடிந்துள்ளது.

ஏனெனில், ஆணைக்குழு அறிக்கை பொய்யான ஒன்றாகும். இதனாலேயே வழக்கு தொடர முடியாதுள்ளது. இது மேன்முறையீட்டு நீதிமன்றிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நான் மேன்முறையீடு செய்ததன் மூலம், இந்த அறிக்கை, அரசியல் பழிவாங்கல் என்பது நிரூபனமாகியுள்ளது.

எனவே சம்மந்தப்பட்டவர்கள், இவ்வாறான அரசியல் பழிவாங்கலில் ஈடுபட வேண்டாம். ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய மோசடிகள் குறித்து பேசினீர்கள். இறுதியில் 11 பர்ச்சசுக்கு வழக்கு தொடர்கிறீர்கள். இது தான் நீங்கள் கூறிய பாரிய மோசடியா? என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com