Saturday, February 16, 2019

மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகமாக வலியுறுத்தக்கூடாது – ஜயநாத் கொலம்பகே

இலங்கையில் பணியாற்றும் போது, மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகமாக வலியுறுத்தக்கூடாது என்று, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் இந்தோ- பசுபிக் பிராந்தியம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் எல் வஜ்டா உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம், இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இலங்கை மிகவும் ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. இது போன்றதொரு நிலைமையை இதற்கு முன்னர் நாங்கள் யாரும் எதிர்கொண்டதில்லை.

எமது பொருளாதார வளர்ச்சி, ஆப்கானிஸ்தானை விட கொஞ்சமே அதிகமாக இருக்கிறது. 30 ஆண்டுகாலப் போரின் போது இருந்ததை விட இப்போதைய நிலை மோசமாக உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போரின் போது கூட, பொருளாதாரம் வளர்ச்சி கண்டது.

இலங்கையுடன் அமெரிக்காவின் ஈடுபாடு மிக முக்கியமானது. இலங்கை போன்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் போது, அமெரிக்கா மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலியுறுத்துகிறது.

30 ஆண்டுகால யுத்தத்தின் போது ஏற்பட்ட பாரிய இழப்புடன் ஒப்பிடுகையில், இப்போது, மக்களின் தனிமனித பாதுகாப்பு அதிகரித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்னர், நாங்கள் மாதம் தோறும் குறைந்தது 250 உயிர்களை இழந்தோம். இப்போது எத்தனை பேரை இழக்கிறோம்?

ஜனநாயகம், எமக்கு எதைக் கொடுத்தது? குறுகிய வாதம், பிளவுகள், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள், என்பவற்றை தான், ஜனநாயகம் எமக்கு கொடுத்துள்ளது என, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com