Thursday, February 7, 2019

மீண்டும் ஏமாற்றம் கண்ட அப்பாவி மக்கள்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும், தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அலரி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்ரமசிக்க தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முடியாது என, முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மீண்டும் உறுதியாக தெரிவித்ததை அடுத்து, இன்றைய பேச்சுவார்த்தையும் தீர்வின்றி நிறைவு பெற்றுள்ளது.

ஏற்கனவே இது குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்ட போதும், அந்த பேச்சுவார்த்தை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்றைய பேச்சுவார்த்தையில் தமிழ் முற்போக்கு கூட்டனியின் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ரவீந்திர சமரவீர ஆகியோருடன், முதலாளிமார் சம்மேளனத்தினரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாயாக அதிகரித்த கூட்டு ஒப்பந்தத்தில், கைகெழுத்திட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தியும், தொடர்ந்தும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தாம் கோரியபடி, அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்காவிட்டால், தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல அமைப்புக்களும் தற்போது போராட்ட களத்தில் குதித்துள்ளன.

நிச்சயமாக 1000 ரூபாய் சம்பளத்தை பெற்று தருவதாக உறுதியளித்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,முன்னாள் ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் மீது, பெருந்தோட்ட மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். உறுதியளித்த வேதனத்தை பெற்றுத்தருவதாக தெரிவித்து, தம்மை ஏமாற்றியது மட்டுமல்லாது, முதலாளிமார் சம்மேளனத்திடம், தம்மை காட்டிக் கொடுத்து விட்டதாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள், மலையக அரசியல்வாதிகள் மீது, பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com