ஏதிலிகள் மீண்டும் தாய்நாட்டிற்கு வர, உதவ வேண்டும் - ஆளுநர் கோரிக்கை.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை ஏதிலிகள், மீண்டும் தாய்நாட்டுக்கு வருவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை உதவியளிக்க வேண்டும் என, வடக்கு மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் அம்மையாருடன், நேற்று சந்திப்பை மேற்கொண்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தில் உள்ள காணிகள், வீடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகளின் நிலைமைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், இலங்கை பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகளும், பண்ணை நிலங்களும் மக்களிடம் படிப்படியாக கையளிக்கப்படுவதை ஆளுநர் சுரேன் ராகவன், ஐக்கிய நாடுகள் அதிகாரியிடம் சுட்டிக்காட்டினார்.
இந்த செயல்பாட்டின் மூலமாக வட மாகாணத்தில் ஏற்கனவே தேவையாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில், திடீரென அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கோரினார்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்து, இந்தியா சென்ற ஏதிலிகளை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை, உதவ வேண்டும் என ஆளுநர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார்.
வடக்கு மாகாணம் இளனியில் இடம்பெற்ற யுத்தத்தால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் பல்வேறுபட்ட பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த தீர்வு வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை ஏற்கனவே இங்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தமது, நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியிடம், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment