மாணவர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து, மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு – மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் சிலர், தாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து இன்று காலை பாடசாலை வாயிற்கதவை மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை
முன்னெடுத்தனர்.
இதன்போது ''பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்கு, மாணவர்களைத் தாக்கியவர்களை உடன் கைது செய், முன்னேறும் வலயம், இது முதுகில் குத்தாதே'' உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.வகாப் தலைமையிலான குழுவினர், நிலைமைய ஆராய்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகாவித்தியாலயத்தின் விளையாட்டுப்போட்டி இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், அந்த மைதானத்திற்குள் நேற்று திடீரென புகுந்த கும்பல், அங்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முதலைக்குடா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் காயமடைந்து, மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் மேலாதிக்க விசாரணைக்கான முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment