Wednesday, February 6, 2019

பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம்மாள், பொது மக்களின் ஆதரவு கோரி, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கடந்த ஜனவரி 24ம் திகதி, இவர் சுற்று பயணத்தை தொடங்கி பல்வேறு கிராமம் மற்றும் நகரங்களுக்குச் சென்றுள்ளார், அத்துடன் கடந்த செப்டம்பர் 2018ல் தமிழக சட்டமன்றம், தனது மகன் பேரறிவாளனின் விடுதலையை உறுதி செய்யும் வகையில், ஆளுநருக்கு பரிந்துரை செய்த போதிலும், ஆளுநர் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்வது ஏன்? என, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரறிவாளனின் கருணை மனுவை, தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலை அடுத்து, தமிழக சட்டமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு நபர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்தது.

அந்த பரிந்துரையைத் தொடர்ந்து, கடந்த ஐந்து மாதங்களில் எந்தவித முடிவும் வெளியாகவில்லை. எனினும் இது குறித்து ஆளுநர் தனது முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்பதுடன், தனது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் முகமாக, பொதுமக்களிடம் அற்புதம்மாள், பலத்த ஆதரவை திரட்டி வருகிறார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அற்புதம்மாள், அடுத்து எந்த கிராமத்திற்கு போகிறோம் என்ற திட்டம் அவ்வப் போது முடிவு செய்யப்படுகிறது. எவ்வாறாயினும் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டுவது மட்டுமே, தமது இலக்கு என்று தெரிவித்தார்.

என்னை சந்திக்க பல பெண்கள் வருகிறார்கள். பள்ளியில் இருந்தோ அல்லது வேலைக்குச் செல்லும் இடத்தில் இருந்தோ, மகன் வரத் தாமதமானால், பரிதவித்து போய் விடுவோம், நீங்கள் தைரியத்துடன் போராடி வருகிறீர்கள், உங்களுக்கு ஆதரவு தருவோம் என பல தாய்மார்கள், ஆறுதல் தெரிவித்தனர். அதே போல, சென்னையில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு வருவதாகவும், உறுதி கூறினார்கள். இது போல பல பெண்களின் ஆதரவு ஒவ்வொரு கூட்டத்திலும் பெருகி வருகிறது, என, பேரறிவாளனின் தாயார் கூறியுள்ளார்.

இவரது சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் மக்களை சந்தித்து வாக்கு கேட்கப் போவதில்லை என்பதால், தன்னிடம் பேச மக்கள் உண்மையான ஆர்வத்துடன் வருவதாக அற்புதம்மாள் கூறியுள்ளார்.

இதுவரை கோவை, ஈரோடு, விருதுநகர், ராஜபாளையம், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கூட்டங்களில் இவர் பேசியுள்ளார்.

தன்னார்வலர்கள் வீடுகளில் தங்கிக் கொள்வது, உணவு உண்பது என, தன் மகனின் வயதை ஒத்த நபர்கள் உதவுகிறார்கள் என்று தெரிவித்த அற்புதம்மாள், இந்த மாத இறுதியில் சென்னையில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் கலந்து பேசி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக கூறினார்.

28 ஆண்டுகளாக தன் மகன் சிறையில் இருக்கிறான். அவனது இளமை காலம் முழுவதையும் தண்டனையில் கழித்து விட்டான். உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி, என் மகனை விடுதலை செய்வதில் அரசு ஏன் தாமதம் செய்கிறது?

இதனை விளக்கி கூட்டத்தில் பேசும் போது, பலரும் என் வலியை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு தருகிறார்கள். பொதுமக்கள் தாமாக முன்வந்து என் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என முடிவு செய்வது, எனக்கு நம்பிக்கையை கொடுக்கிறது என அவர் கூறினார்.

இதேவேளை அற்புதம்மாளின் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து வெளியிடும் போது, தமிழக அரசு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்றும், ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையை, மாநில அரசு கையாளவில்லை. இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment