மாகந்துரே மதூஸ் கைதானமை, இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரசாங்கம்!
பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையினை, டுபாய் அரசாங்கம் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவிக்கவில்லை என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாகந்துரே மதூஸ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளமை குறித்து, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன கருத்து வெளியிடும் போது, இதனை கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது டுபாய் அரசாங்கத்துடன், இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைககள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைககள் வெற்றியளிக்கும் பட்சத்தில், டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை, விரைவில் இலங்கைக்கு அழைத்து வர முடியும் எனவும், இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகம், கொலை,கொள்ளை உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்ட 25 பேர் , டுபாயிலுள்ள ஆறு நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து, நேற்று கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
இவ்வாறு கைதானவர்களில் இலங்கை பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பாதாள உலக குழு உறுப்பினர்களான கெசல்வத்தே தினுக, கஞ்ஜிபானி இம்ரான், ரனாலே சூட்டா மற்றும் அங்கொட சுத்தா ஆகியோரும் உள்ளங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களின் ராஜதந்திர கடவுசீட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதாள உலக குழுவினர் தங்கியிருந்த விருந்தகத்தில், விருந்துபசாரம் வழங்கப்பட்ட போது, ஒருவர் ராஜதந்திர கடவுசீட்டை வைத்திருந்ததாக விடுதி நிர்வாகம், டுபாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியது.
இதன்போதே, கைது செய்யப்பட்டவர்களில், ஒருவரிடம் இந்த ராஜதந்திர கடவுசீட்டு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment