நாட்டில் தற்போது இனப்பிரச்சனையோ , பிரதேச பிரச்சனையோ இல்லை - பாலித்த ரங்கே பண்டார
தற்போதுள்ள நாட்டில், இனப்பிரச்சினையோ அல்லது பிரதேச பிரச்சினையோ இல்லை என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தேசிய அரசாங்கம் குறித்து கருத்து வெளியிட்ட போது, அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய கொள்கைகளை ஒன்று சேர்க்கும் விதத்தில் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்துக்கான பெரும்பான்மை ஆதரவினை நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்ளும்.
கடந்த காலத்தை போன்று அல்லாமல், சிறந்த தேசிய அரசு ஒன்றை கட்டியெழுப்புவதுடன் வரவு – செலவுத் திட்டத்திற்கான பெரும்பான்மை பலத்தையும் பெற்று, தேசிய அரசாங்கத்தின் உறுதித் தன்மையினை நிலை நாட்டுவோம்.
கடந்த ஏழு தசாப்தங்களில் நாம் இனப்பிரச்சினை, பிரதேசவாத பிரச்சினையென பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தோம். எனினும் தற்போது இலங்கையில் அத்தகைய இனப்பிரச்சினையோ அல்லது பிரதேச பிரச்சினையோ இல்லை.
வடக்கு மற்றும் தெற்கை சேர்ந்த மக்கள், ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வுடன் வாழ்கின்றனர். இந்த நிலை கடந்த மூன்றரை வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய கொள்கைகளினூடாகவே கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த மாற்றத்தை கட்டியெழுப்பும் நோக்கிலும், தேசிய ஒற்றுமையை பாதுகாத்து கொள்ளவும் மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்க எமது தரப்பு தீர்மானம் எடுத்தது.
பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ள நிலையில், அதற்கு ஏற்ற வகையில் தேசிய ஒருமைப்பாடும் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு தேசிய அரசாங்கமே தீர்வாக அமையும் என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment