Saturday, February 9, 2019

மாகந்துரே மதுஸுக்கும், மங்களவுக்கும் இடையில் தொடர்புள்ளதா?

பாதாள உலக குழுவின் முக்கிய தலைவராக கருதப்பட்ட மாகந்துரே மதுஸ் உள்ளிட்ட 25 பேர், டுபாயில் மறைந்திருந்த நிலையில், அந்த நாட்டு காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாகந்துரே மதுஸுக்கும், அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக செய்திகள் பரவின.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர கடிதமொன்றை எழுதியுள்ளார். கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவில், ராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்தவர் யார்? என்பது தொடர்பிலான விசாரணையை விரைந்து நடத்துமாறு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம், நேற்றைய தினம், பொலிஸ்மா அதிபருக்கு எழுதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்ட போது, ராஜதந்திர கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்டவர், தனது ஊடக இணைப்புச் செயலாளர் என்று, பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன் ராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபருக்கும், தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்று, இதுவரை இடம்பெற்ற இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புகளின் போது தான் தெரிவித்திருந்த போதும், தனக்கு எதிரான பிரச்சாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மங்கள சமரவீர தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

குத்துடன் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை போன்று, தான் யாருக்கும் ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பொய்ப் பிரச்சாரம் காரணமாக, தனது 30 வருட காலத்திற்கும் மேற்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் மங்கள சமரவீர தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

எனவே, டுபாயில் ராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபர் யார் என்பதை கண்டறிவதற்காக, விசேட விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பொலிஸ்மா அதிபரிடம் தனது கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும், அந்த செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செயற்பாடுகள், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசியல்வாதிகளிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு இலங்கை ஒரு மூலஸ்தானமாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே, மேல் மாகாண ஆளுநர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

No comments:

Post a Comment