Thursday, February 21, 2019

கொக்கேயின் விவகாரம் - அமைச்சு பதவிகளை இழக்கும் ரஞ்ஜன், பத்திரன

ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் புத்திக பத்திரன ஆகியோரிடமிருந்து அமைச்சுப் பதவிகளை இல்லாமல் செய்யுமாறு, ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கொக்கேன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையான நிலைமை உருவாகியுள்ளது. இதேபோன்றே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாக பிரதி அமைச்சர் புத்திக்கபத்திரன நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதன் காரணமாக., ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இவர்கள் இருவரின் கருத்துக்களினாலும் அரசாங்கத்துக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக விமர்ச்சிக்கப் படுகின்றது. இந்த நிலைமைக்கு தீர்வு காணும் பொருட்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த இருவரையும் உடனடியாக அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குமாறு கட்சிக்குள் பரிந்துரை நடைபெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுக்காற்றுக் குழுவின் அறிக்கை வரும் வரையில் காத்திருக்காமல் அவர்களை அப்பதவிகளிலிருந்து நீக்கிவிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் வைத்து இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நான்கு உறுப்பினர்கள் கொண்டதாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் அறிவிக்கை ஐ.தே.க.யின் நிறைவேற்றுக் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment