Tuesday, February 19, 2019

மரண தண்டனையில் எந்தவித மாற்றமும் இல்லை - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, உறுதியாக மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரில் நால்வர், வௌிநாட்டுப் பிரஜைகள் என்பதால், ஏனைய 13 பேருக்கு மாத்திரமே மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குற்றவாளிகளின் பட்டியலில் 4 பாகிஸ்தானிய பிரஜைகளின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளன. குறித்த நால்வரையும் விடுவிக்குமாறு பாகிஸ்தானிய அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த உயர் அதிகாரி குறிப்பிட்டார்,

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 48 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 30 பேர் மேன்முறையீடு செய்துள்ளதால் அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரின் பெயர்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல், அண்மையில் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து குற்றவாளிகளும், 50 வயதுக்கு குறைவானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com