பெருந்தோட்ட மக்களை பணயம் வைத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிழைப்பு நடத்துகிறது - வேலுகுமார்
ஐக்கிய தேசிய முன்னணிக்குள் நுழைந்து, பதவிகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதே, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கிய இலக்கு என, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாவலப்பிட்டிய ரிலாகல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடேசன்புரம் வீடமைப்புத் திட்டத்தின் திறப்பு விழா, இன்றைய தினம் இடம்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறுபட்ட அரசியல் இலாபங்களுக்காக, பெருந்தோட்டத் தொழிலாளர்களை பணயம் வைத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிற்சங்க பிழைப்பு நடத்தி வருகின்றது.
கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த முறை, முறை விடுதலைப் பெற்றுக்கொடுத்து விட்டது போல், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மார்தட்டிக் கொள்கின்றது.
அத்துடன் தமது கட்சியே, மலையக மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற தொனியிலும் அந்த கட்சியின் உறுப்பினர்களால் மலையகத்தில், தீவிரமாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
90 காலப்பகுதியிலேயே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஆரம்பம் முதல் நியாயமான விகிதத்தில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்திருக்குமானால் தற்போது பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாய்க்கும் அதிகமாக வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால், குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவும், குறுக்கு வழி அரசியலுக்காகவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை பணயம் வைத்து தொழிற்சங்க பிழைப்பு நடத்திய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட மக்கள் எதிர்பார்த்த நியாயமான சம்பளத்தை ஒருபோதும் பெற்றுத்தரவில்லை, என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment