கடத்தப்பட்டவர்கள், கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர் – குற்றப் புலனாய்வு திணைக்களம்
வெள்ளை வேன் ஒன்றில் கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர், திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான சாட்சிகள் உள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியது.
இது தொடர்பாக பலர் சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் தொடர்பான வழக்கு விசாரணை, கொழும்பு, கோட்டை நீதவான் நிதிமன்றில் இடம்பெற்ற குற்றப்புலனாய்வு திணைக்களம் இதனை குறிப்பிட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலமான 2008, 2009 ஆம் ஆண்டுகளில், தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர், வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட புலனாய்வாளர்களையும் கைது செய்தது.
இந்த நிலையில் இதுதொடர்பண வழக்கு விசாரணையின் போது, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடத்தப்பட்ட 11 பேரில், ஐந்து பேர் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக, சிலர் சாட்சியமளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த சாட்சியாளர்கள் அந்த முகாம் அமைந்துள்ள இடத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு காட்டியுள்ளதாகவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதியளிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியது.
அதேநேரம், இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் உட்பட மூவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 6 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், நீதவான் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment