Sunday, February 17, 2019

நாட்டை யாரிடம் நாம் ஒப்படைக்கப்போகிறோம் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி

கொழும்பில், இன்று இடம்பெற்ற மகஜன எக்சத் பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி, பலமான கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் 22 ஆவது தேசிய மாநாடு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் என்ற தினேஷ் குணவர்த்தனவின் யோசனைக்கு தான் முழுமையாக ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இந்த நாட்டில் சில முக்கியமான தருணங்களின்போது, கட்சி, சின்னங்களையெல்லாம் கடந்துதான் நாம் முக்கியமானத் தீர்மானங்களை எடுத்துள்ளோம் என்றும் கூறினார்.

நாட்டை யாரிடம் நாம் ஒப்படைக்கப்போகிறோம் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாட்டை அடிப்படைவாதிகளுக்கு வழங்கப்போகிறோமா அல்லது நாட்டை நேசிக்கும், பிரச்சினைகளுக்காக தீர்வை முன்வைக்கும் தரப்புக்கு வழங்கப்போகின்றோமா என்பதை மக்கள் தமது மனச்சாட்சியின்படி முடிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

எமது அரசியல் தீர்மானங்கள் முழு நாட்டுக்காகவுமே எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், பலமான அணியொன்றை தற்போது ஸ்தாபிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். அத்தோடு, இந்த வருடம் தேர்தல் நடைபெறும் வருடமாகும். எப்படியும் புதிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இதனை நாம் மறந்துவிடவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment