Tuesday, February 12, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர், எம்.ஏ.சுமந்திரனா ?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக எம்.ஏ.சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும், தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமப்படும் நிலையிலேயே, கூட்டமைப்பின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் மிகச் சிறந்த தலைவர். ஆனால் அவரது உடல் நிலை தற்போது நன்றாக இல்லை. இதனால் அவர் கட்சியின் காப்பாளராக இருக்க வேண்டும் என்று, உறுப்பினர்கள் விரும்புகின்றனர். என்று சரவணபவன் கூறியுள்ளார்.

கட்சியின் மூப்பு நிலைப்படி நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவே, கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வர வேண்டும். எனினும், அவரது உடல்நிலைய தீவிரமான அரசியல் செயற்பாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு ஏற்றதாக இல்லாமையினால், சுமந்திரனை முன்னிறுத்த முயற்சிகள் நடப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com