''கைதிகளும் மனிதர்களே'' - ஜனாதிபதிக்கு விளக்கிய, மனித உரிமை ஆணைக்குழு.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீது முன்வைத்த விமர்சனங்கள் குறித்த செய்திகள் தற்போது அதிகமாக அடிபடுகின்றன. ஒரு புறம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த விமர்சனங்களால், ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. மறு புறம் ஜனாதிபதி தன்னிலை விளக்கங்களை வழங்க வேண்டும் என்றும், பலரால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிகா உடகம கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், அநீதியான விமர்சனங்கள் காரணமாக, நாங்கள் மனமுடைந்து போயுள்ளதுடன் உற்சாகம் இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறைச்சாலையில், கைதிகள் தாக்கப்பட்ட விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீடு குறித்து, கருத்து தெரிவித்துள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள தீபிகா உடகம, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை கண்காணிப்பதும், உரிமைகளை உறுதி செய்வதும் மனித உரிமை ஆணையகத்தின் முக்கிய பணிகளில் ஒன்று என தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகளின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான தண்டனைகள் குறித்து, இலங்கை மனித உரிமை ஆணையம் தகவல்களை முன்வைப்பது, குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வதாக அர்த்தப்படுத்தப்படுவதாகவும், அது முற்றாக தவறானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறைகளில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்து, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக ஆணைக்குழு விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியது . அந்த கடிதத்தில் கைதிகளும் மனிதர்களே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மாலியில் உள்ள இலங்கையின் அமைதிகாக்கும் படையினரை மீள அழைப்பது, இலங்கை மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கைகளால் தாமதமானது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது தவறானது எனவும், தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.
மாலியில் இலங்கை படையினர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் மீது பழியை போடுவது, கடும் கரிசனத்தையும் வேதனையும் அளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களது சுதந்திரத் தன்மை காரணமாகவும், எங்கள் மீதான நம்பிக்கை காரணமாகவும், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் தற்போது இடம்பெற்று வரும், படையினர் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை, ஐக்கிய நாடுகள் சபை எங்களிடம் வழங்கியுள்ளது என, இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் தீபிகா உடகம, ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment