Wednesday, February 13, 2019

முருகன் மற்றும் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில், முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது விடுதலை தொடர்பான ஆவணத்தில், தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்திடாமல், இழுத்தடிப்பு செய்வதாக குறிப்பிட்டு, முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகிய இருவரும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், 6 ஆவது நாளாகவும், பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி 4 ஆவது நாளாகவும் தமது உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் சிறைச்சாலையின் விதிகளை மீறியதாக குறிப்பிட்டு, முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே, மீண்டும் அவர்களுக்கான சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என, தமிழ்நாடு சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், தமிழ்நாடு ஆளுநரிடமிருந்து தீர்க்கமான பதிலொன்று வரும் வரை, தாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லையென நளினி மற்றும் முருகன் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நளினி மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment