Sunday, February 10, 2019

அடுத்து வரப்போவது, மாகாண சபை தேர்தலே - மீண்டும் ஜனாதிபதி வலியுறுத்தல்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், மாகாண சபை தேர்தலே இடம்பெறும் என, ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது குறித்து சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சனைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படும் என அவர் தெரிவித்தார். நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இதனை கூறினார்.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். எனினும் சில தரப்பினர், பலவந்தமான தேர்தலை நடத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்பட போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நலன் கருதி, ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில், பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை பாதாளத்திற்குள் தள்ளும் போதைப்பொருள் கடத்தல் குறித்து, தாம் மிகவும் பாடுபட்டு அதிக வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த செயல்திட்டத்திற்காக இலங்கையில் என்றும் இல்லாதவாறு, காவல்துறையினரை பலப்படுத்தியுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் மேலும் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள தான் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்ரீலங்கா சுதரித்திர கட்சி அர்ப்பணிப்புடன் செயல்படும் என, இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

No comments:

Post a Comment