Friday, February 1, 2019

பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஒரு காரணம் - சந்தியா எக்னெலிகொட.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டமையும், தனது கணவர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்கு ஒரு காரணமாக இருந்ததாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஞானசாரரின் விடுதலை குறித்து தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி சந்தியா எக்னெலிகொட, ஜனாதிபதிக்கு கடிதமொன்றை கையளித்தார்.

அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தில் கலகொட அத்தே ஞானசாரரை, ஜனாதிபதி விடுவிக்கவுள்ளதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக சட்டமா அதிபர், ஜனாதிபதி, புத்தசாசன அமைச்சர் ஆகியோருக்கு நான் அறிவித்திருந்தேன்.

பிரகீத் வழக்கில் சாட்சியாளர் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவரும் நானே. சாட்சியாளர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையின் கீழ் எனக்கு இதுபற்றி தெளிவுபடுத்த வேண்டும். அது தொடர்பாக ஜனாதிபதிக்கு இன்று கடிதமொன்றை கையளித்துள்ளேன்.

அதன் பிரதிகளை நீதி அமைச்சு, சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கு கையளித்துள்ளேன்.

பிரகீத்தை கிரித்தலேக்கு கடத்திச் சென்று அப்போது ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சரத் பொன்சேகாவுடனான தொடர்பு என்னவென்று வினவியுள்ளனர். தேர்தல் பிரசாரம் தொடர்பாக வினவியுள்ளனர். இதனடிப்படையில் மஹிந்த மற்றும் கோட்டா ஆகியோரே பிரகீத்தை கடத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும், ஒரு வகையில் அவரது கடத்தலுக்கு ஒரு காரணம். இதனால், தமக்கு ஆதரவான ஊடகவியலாளர்களை பயன்படுத்தி போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என மஹிந்த மற்றும் கோட்டாவை தாழ்மையுடன் கோருகிறேன். இதேவேளை, பிரகீத்தை கடத்தியது மஹிந்தவும், கோட்டாவுமே என்பதை எந்த இடத்திலும், எந்த தருணத்திலும் நான் உறுதியாக கூறுவேன் என சந்தியா எக்னெலிகொட தமது கடித்தது குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment