ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த தேசிய அரசாங்கம் அமைக்கும் விடயம் தொடர்பிலான யோசனை, நாளை வாக்கெடுப்புக்கு விடப்படும் என, சாயநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், இந்த யோசனை தொடர்பான விவாதம் இடம்பெற்றது. இதன்போது தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாளைய தினம் வாக்கெடுப்புக்கு விட கட்சித் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள தேசிய அரசாங்கம் குறித்த யோசனை மீதான வாக்கெடுப்பிற்கு ,கட்டாயம் ஆதரவளிக்குமாறு, ஆளும் கட்சியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, ஏனைய கட்சிகளின் கருத்தை பொருட்படுத்தாது முன்னெடுக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன் மக்கள் நலனை பாராது முன்னெடுக்கப்படும் இந்த செயல்பாட்டை, தாம் ஒருபோது ஏற்க மாட்டோம் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு பேரவைக்கு மிகவும் பொருத்தமானவர்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவைக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் குற்றச்சாட்டை சபாநாயகர் நிராகரித்து, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெரிவு நடைமுறையில் சிரேஷ்டர்கள் என்ற விடயம் மாத்திரம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
ஜனாதிபதியின் பட்டியலிடப்பட்ட பரிந்துரைக்கமையவே ஒவ்வொரு நியமனமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை எவரையும் தன்னிச்சையாக நியமிக்கவில்லை.
ஜனாதிபதியின் பரிந்துரைகளுக்கமைய பொருத்தமான உறுப்பினர்களை தெரிவு செய்வதில் எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை. நாம் இதில் எவ்வித தவறுகளையும் காணவில்லை என, நாடாளுமன்றத்தில் வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். இதன்போது, அரசியலமைப்பு சபைக்கான நியமனத்தில் சிரேஸ்ட உறுப்பினர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment