இந்த நாட்டில் தற்போது ஸ்திரமானதும், பலமானதுமான அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமை மேலும் தொடருமானால், நாட்டில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திவுலபிட்டியவில் இடம்பெற்ற எளிய அமைப்பின் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறானதொரு நாட்டை எதிர்க்காலத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில், நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் பலமான அரசாங்கம் என்ற ஒன்று இருந்தமையாலேயே, வெளிநாட்டு முதலீடுகள் இங்கு கொண்டு வரப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமின்றி இருந்தார்கள்.
ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கங்கள் மாறியவுடன் அபிவிருத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் நிச்சயமாக இலங்கையில் முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் எவரும் முன்வர மாட்டார்கள்.
இதன் விளைவாகவே 4 வருடங்கள் கடந்தும், இந்த அரசாங்கத்தால் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும், மேற்கொள்ள முடியாது உள்ளது என்று, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment