பிரபாகரன் ஏன் உருவாகினார்? என்று, யாரும் இதுவரை ஆராயவில்லை - நிரோஷன் பிரேமரத்ன.
பிரபாகரனின் தந்தையின் மரணத்தில் பல இராணுவ வீரர்கள் கண்ணீர் சிந்தினார்கள். அதற்காக அவர்கள் பிரபாகரனின் ஆதரவாளர்கள் என்று ஒருபோதும் கூறிவிட முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார். பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷின் தந்தையின் இறுதி கிரியைகளில் கலந்துகொண்டமையால் நிரோஷன் பிரேமரத்ன மீது, பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் இதனை கூறினார்.
தான் மனிதாபிமான அடிப்படையிலேயே மதுஷின் அப்பாவின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டேன். எனினும் இது குறித்து ஜே.வி.பி. தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றது. இலங்கையின் யுத்த காலத்தில் பல உயிர்கள் கொன்று குவிக்கப்பட்டன. அத்துடன் பிரபாகரனின் தந்தை மரணித்த போது, இலங்கையின் இராணுவ வீரர்கள் கண்ணீரே சிந்தினார்கள். அதற்காக அவர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள் என கூறினால், அது தவறான கருத்தாகும். ஜே.வி.பியின் தீவிர ஆதரவாளரான மாகந்துரே மதுஷின் தாயாரை, பிரேமதாச அரசே சுட்டுக்கொன்றது என, நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன குறிப்பிட்டார்.
பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஸுக்கும் தனக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை. அவருக்கு எந்தவித கொடிய தண்டனைகளை வழங்கினாலும், அதை பற்றி எனக்கு கவலையில்லை. மதுஷ் போன்ற மோசமான நபர்கள், இனியும் இந்த நாட்டில் இருக்க கூடாது. அத்துடன் மதுஷ் இவ்வாறு நடந்து கொண்டமைக்கான காரணத்தை அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் அவரை போன்றவர்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மதுஷின் இந்த நிலைக்கும் ஒரு வகையில் ஜே.வி.பியே காரணமாகும். மதுஷின் தாயாரை பிரேமதாச அரசு கொன்று விட்டது. அவரது தந்தை வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். மாகந்துரே மதுஷ் வேறு ஒருவரிடம் வளர்த்துள்ளார். இதனாலேயே மதுஷின் வாழ்க்கை தலைகீழாகியுள்ளது.
என்னை மாகந்துரே மதுஸுடன் தொடர்புபடுத்தும் ஜே.வி.பியின் உறுப்பினர்கள், மதுஷின் தாயாரது மரண சடங்கில் ஒரு தடவையாவது கலந்து கொண்டார்களா?
பிரபாகரன் ஏன் உருவாகினார்? என்பதை நாம் யாருமே ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆனால் பிரபாகரனின் உருவாக்கத்தை அடுத்து, நாட்டுக்கு பலத்த அழிவு ஏற்பட்டது. இப்போது மதுஷ் ஏன் உருவாகினார்? என்பதையாவது அறிந்து, நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment